நகரி: ஆந்திராவில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஜெகன்மோகன் ரெட்டி முதல் அமைச்சரானார். அப்போது இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி 25 அமைச்சர்கள் பதவி விலகினர். இதனையடுத்து அமராவதி நகரில் புதிய அமைச்சரவை நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டது. இதில் 13 பேர் புதுமுகங்கள். 11 பேர் முந்தைய அமைச்சரவையில் இருந்தவர்கள்.
புதிய அமைச்சர்கள் பட்டியலில் பிரபல நடிகையும், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜாவும் ஒருவர்.
ரோஜாவுக்கு சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் மற்றும் கலை விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.
அமைச்சராகப் பதவியேற்றதும் ரோஜா அளித்த பேட்டியில், முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி எனக்கு அளித்த இந்த வாய்ப்பை வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்.
"அமைச்சரானதால் மக்கள் பணியில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக் கொள்ள இருப்பதால், இனி திரைப்படத்திலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடிப்பதை நிறுத்திக்கொள்வேன்," என்று தெரிவித்துள்ளார்.

