புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து
புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அண்டை நாடான பாகிஸ்தானில் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீப்புக்கு டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துப் பதிவில் "பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்வுசெய்யப்பட்ட மியான் முகமது ஷெபாஸ் ஷெரீபுக்கு எனது வாழ்த்துகள்.
"பாகிஸ்தான் பயங்கரவாதம் இல்லாத வட்டாரமாகவும் அமைதியும், நிலைத்தன்மையும் கொண்ட பகுதியாகவும் இருக்கவேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அமைதியிருந்தால் வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொண்டு மக்களின் நலனையும் வளத்தையும் உறுதி செய்யலாம்," என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் 23வது பிரதமராகப் பதவியேற்ற ஷெபாஸ் ஷெரீப், காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அமைதியை விவாதிக்க முடியாது என தனது முதல் உரையில் கூறியிருந்த நிலையில், அமைதியை நிலைநாட்டாமல் வளர்ச்சி காண முடியாது என்று வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணிக் கட்சிகள் மீட்டுக்கொண்டதை அடுத்து அவரது ஆட்சி கவிழ்ந்தது. புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பின் நாடாளுமன்றத்தில் பேசிய ஷெபாஸ் ஷெரீப், "இந்தியாவுடன் நல்ல உறவையே விரும்புகிறோம். ஆனால், காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் அமைதியை விவாதிக்க முடியாது. காஷ்மீரில் 370வது பிரிவை நீக்கிய விவகாரத்தில், காஷ்மீர் சகோதர சகோதரிகளுக்கு பாகிஸ்தான் தனது தார்மீக ஆதரவை வழங்கும்.
"காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கேற்ப காஷ்மீர் பிரச்சினையை நாங்கள் முடிவு செய்வோம்.
"இருநாடுகளுக்கு இடையேயான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து வேலைவாய்ப்பை பெருக்குவோம், மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவோம்," என்று உரையாற்றியிருந்தார்.

