நீரவ் மோடி கூட்டாளி சுபாஷ் சங்கர்
எகிப்து நாட்டில் கைது
மும்பை: ஆயிரத்து 578 கோடி ரூபாய் கடன் மோசடி புகாரில் சிக்கி, லண்டனுக்குத் தப்பி ஓடிய நீரவ் மோடியின் நண்பர் சுபாஷ் சங்கர் என்பவர் எகிப்து நாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். நீரவ் மோடியின் பெரும்பாலான பண பரிவர்த்தனைகளை சுபாஷ் சங்கர்தான் செய்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை மும்பை அழைத்து வந்துள்ளனர்.
நீரவ் மோடி வழக்கில் சுபாஷ் சங்கர் கைதானது மிக பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. மும்பை அழைத்து வரப்பட்டுள்ள சுபாஷ் சங்கர் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார். அதன் பிறகு அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்துவார்கள். இதன் மூலம் பல முக்கியத் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீரவ் மோடி நடத்திய வைர வர்த்தக நிறுவனத்தின் பொது மேலாளராக சுபாஷ் சங்கர் பணியாற்றியவர் என்று கூறப்படுகிறது.
பாஜக ஆட்சி மன்றக் குழு
உறுப்பினராகிறார் ஆதித்யநாத்
புதுடெல்லி: உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் 2-வது முறை வெற்றி பெற்றதற்கு பிறகு முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உள்ளார். இதன் மூலம் 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. மத்தியில் ஆளும் பாஜக கட்சி ஆட்சி மன்றக் குழுவில் இரண்டு உறுப்பினர்கள் பதவிகள் காலியாக உள்ளன. மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் மறைந்த பிறகு அந்த இடங்கள் நிரப்பப்படவில்லை. அதன் காரணமாக ஆதித்யநாத் பாஜக ஆட்சி மன்றக் குழுவினராக ஆக்கப்படுகிறார் என்று கூறப்படுகிறது.
உ.பி.யில் இரண்டாவது முறை தேர்தலில் வெற்றி பெற்று சாதனை படைத்த ஆதித்யநாத், துறவியாகவும் உள்ளார். அவர் இந்துத்துவா கொள்கையை உறுதியாக கடைப்பிடிப்பார் என்று பாஜக.வின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கினரும் கருதுவதாகக் கூறப்படுகிறது.
மராட்டிய அரசை சீர்குலைக்கும்
பாஜகவின் முயற்சி முறியடிக்கப்படும்
மும்பை: மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதன் மூலமும், மாநிலங்களுக்கு இடையே சர்ச்சைகளை உருவாக்குவதன் மூலமும், தலைவர்களுக்கு எதிரான விசாரணையை நடத்துவது மூலமும், பாரதிய ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டில் இல்லாத மாநிலங்களைச் சீர்குலைக்க அக்கட்சி முயற்சி செய்து வருகிறது. வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரித்து மக்களின் கவனத்தை வேறு பிரச்சினைகளில் திசை திருப்புகிறது பாஜக அரசு என்று சாடியுள்ளார் சரத்பவார். அத்துடன் மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி அரசை சீர்குலைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. இவை அனைத்தையும் தேசியவாத காங்கிரஸ் முறியடிக்கும் என்று சரத்பவார் பேசியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று முன்தினம் அமராவதியில் நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.
பெங்களூருவில் மேலும் மூன்று
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவிலும் அதன் புறநகரிலும் உள்ள 15 பள்ளிகளுக்கு கடந்த வாரம் சிலர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மேலும் மூன்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாக அப்பள்ளிகள் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து காவல்துறை நடத்திய விசாரணையில், பல்வேறு முகவரிகளில் இருந்து பள்ளிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பி மிரட்டி இருப்பது தெரியவந்துள்ளது.

