அவுரங்காபாத்: அமலாக்கத்துறையின் கொடூர சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று அமைச்சர் சகன் புஜ்பால் பேசினார்.
மகாராஷ்டிராவில் ஆளும் கட்சித் தலைவர்கள் அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் பதவியை இழந்த அனில் தேஷ்முக், கைதாகி பல மாதங்களாக சிறையில் உள்ளார். அவருக்கு பிணை கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அவுரங்காபாத்தில் சமூக சீர்திருத்தவாதி மகாத்மா புலே பிறந்தநாள் விழாவில் அமைச்சர் சகன் புஜ்பால் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், "அமலாக்கத்துறையின் கீழ் கொடூரமான சட்டப்பிரிவுகள் உள்ளன. இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு எளிதில் பிணை கிடைப்பதில்லை.
அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மீது வேண்டுமென்றே இந்த கொடூரமான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கையாக அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.
எனவே கொடூர சட்டப்பிரிவுகளை நீக்கவேண்டும். இது தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும்," என்று வலியுறுத்தினார்.
அமைச்சர் சகன் புஜ்பால் ஊழல் வழக்கில் சிக்கி நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

