புதுடெல்லி: இவ்வாண்டு அக்டோபரில் ஜெட் ஏர்வேஸ் மீண்டும் செயல்படத்தொடங்கும் என்று அந்த நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி சஞ்சீவ் கபூர் தெரிவித்துள்ளார்.
இம்மாத இறுதிக்குள் விமான நிறுவனம் செயல்படுவதற்குத் தேவையான அனுமதி கிடைத்துவிடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த வாரம்தான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பை சஞ்சீவ் கபூர் ஏற்றார். தற்போது நிறுவனத்தில் 200 ஊழியர்கள் உள்ளனர். இதில் மூன்றில் இரு பங்கு ஊழியர்கள் ஏற்கெனவே ஜெட் ஏர்வேஸில் பணியாற்றியவர்கள்.
கடன் பிரச்சினை காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 2019ஆம் ஆண்டில் மூடப்பட்டது.
இதையடுத்து என்.சி.எல்.டி. வெளிநாடு வாழ் இந்தியர்களான ஜலான் மற்றும் லண்டனைச் சேர்ந்த கல்ராக் கேபிடல் ஆகிய நிறுவனங்களிடம் அந்நிறுவனம் ஒப்படைக்கப்பட்டதாக தமிழக ஊடகமான புதிய தலைமுறை தெரிவித்தது. இந்தக் குழுமம் 1,350 கோடி ரூபாயை முதலீடு செய்ய ஒப்புக்கொண்டது. இதில் சுமார் ரூ.450 கோடி வரை பழைய கடன்களுக்குச் செல்லும். எஞ்சிய தொகை நிறுவனத்தை மீண்டும் நடத்துவதற்குப் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமைச்செயல் அதிகாரியான விபுலா குணதிலகா, ஜெட் ஏர்வேஸின் தலைமை நிதி அதிகாரி யாகப் பொறுப்பு ஏற்றார்.