கோவில் திருவிழாவுக்காக
விமான ஓடுபாதை மூடல்
திருவனந்தபுரம்: பங்குனி திருவிழாவின் ஒரு பகுதியாக நடத்தப்படும் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் ஆராட்டு ஊர்வலத்தை முன்னிட்டு கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் அனைத்துலக விமான நிலைய ஓடுபாதை இன்று (ஏப்ரல் 15) மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விமான நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உள்நாட்டு மற்றும் அனைத்துலக விமானச் சேவைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, விமானப் பயணிகளுக்கு கவர்ச்சிகரமான பரிசுகளுடன் பல்வேறு போட்டிகளும்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்
குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அம்பேத்கர் 132வது பிறந்த நாள்
புதுடெல்லி: சமூக சீர்திருத்தவாதி என்று போற்றப்படும்
பி.ஆர்.அம்பேத்கரின் 132வது பிறந்த நாள் நேற்று நாடு முழு வதும் கொண்டாடப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்திலுள்ள அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு அதிபர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பரோலில் சென்று 33 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 1986 ஆம் ஆண்டு ரகுநந்தன் சிங் என்பவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. பின்னர், 1989ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ரகுநந்தன் சிங் மேல்முறையீடு செய்தார். அதைத் தொடர்ந்து அவர் பரோலில் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் மாயமானார். காவல்துறை அவரை தீவிரமாகத் தேடி வந்தது. ஒரு கட்டத்தில் ரகுநந்தன் இறந்துவிட்டதாக அவரது கிராமத்தினரும் காவல்துறையினரும் கருதினர். இந்த நிலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மரணம்
வயநாடு: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள கரும்பன்மூலாப் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீஸ். இவரின் உறவினர் திருமண விழாவில் பங்கேற்க கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதிக்குக் குடும்பத்துடன் காரில் சென்றார். திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு சொந்த ஊர் திரும்பிய போது மீனங்காடி, காக்கவயல் பகுதியில் டேங்கர் லாரி ஒன்று காரில் மோதியது. அதில், காரில் இருந்த பிரவீஸ், 39, அவர் மனைவி ஸ்ரீஜிஷா, 34, தாய் பிரேமலதா, 62, ஆகிய மூவரும் உயிரிழந்தனர். காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட பிரவீஸின் 5 வயது மகனை கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மோடியின் புத்தாண்டு வாழ்த்து
புதுடெல்லி: பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி யில், "அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். குறிப்பாக, எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள். வரும் புத்தாண்டு வெற்றியையும் மகிழ்வையும் தரட்டும். எல்லா லட்சியங்களும் நிறைவேறட்டும்," என்று தெரிவித்துள்ளார்.
4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நேற்று நடத்திய தாக்குதலில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஷோபியன் மாவட்டத்தைச் சேர்ந்த செய்னாபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புப் படையி னருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னரும் அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

