எரிபொருள் விலை உயர்வால் ஏற்படும் பேரிழப்பைச் சமாளிக்க அரசு போக்குவரத்துக் கழகங்கள் கடும் முயற்சி
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. கேரளாவில் மே மாதம் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலை நாடு முழுவதும் விலை அதிகரித்துள்ளது. பேருந்துகள் பயன்படுத்தும் டீசல் ஒரு லிட்டர் விலை 100 ருபாயைத் தாண்டிவிட்டது. இதனால் அரசு போக்குவரத்துக் கழகங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன.
இழப்பை ஈடுகட்ட பேருந்து பயணச்சீட்டுக் கட்டணங்களை உயர்த்த பல்வேறு மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. கேரளாவில் போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்பட்ட இழப்பு காரணமாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
ஆந்திரா மாநிலத்திலும் போக்குவரத்துக் கழகம் பெரும் இழப்பை சந்தித்து வந்தது. இதையடுத்து அங்கு பேருந்துக் கட்டணங்களை உயர்த்த அரசு முடிவு செய்தது. அந்த கட்டண உயர்வு நேற்று (ஏப்ரல் 14) முதல் நடப்புக்கு வந்தது.
கிராமப்புறங்கள் மற்றும் மாநகர பகுதிகளில் இயக்கப்படும் அரசு நகரப் பேருந்துகளில் தொடக்கக் கட்டணம் ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து கிலோமீட்டருக்கு ஏற்றவகையில் கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. சொகுசுப் பேருந்தில் 5 ரூபாயும் சூப்பர் டீலக்ஸ் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தைவிட 10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு டீசல் விலை ஆந்திராவில் ரூ. 60 ஆக இருந்தது. தற்போது ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பேருந்துப் பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில போக்குவரத்து நிர்வாக இயக்குநர் துவாரக திருமலைராவ் தெரிவித்துள்ளார்.
பேருந்துக் கட்டண உயர்வைத் தொடர்ந்து ஆந்திராவில் டாக்சி, ஆட்டோ கட்டணங்களும் நேற்று உயர்ந்தன. கேரளாவில் மே 1ஆம் தேதி முதல் பேருந்து, டாக்சி, ஆட்டோ பயணக் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று அம்மாநில போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி ராஜ் கூறியுள்ளார்.

