புதுடெல்லி: அமெரிக்காவில் நடந்த இந்திய, அமெரிக்க அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு நாட்டு அமைச்சர்களும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் பேசுகையில், "இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன. அதை அமெரிக்கா பார்த்துக்கொண்டுதான் உள்ளது," என்று கூறினார்.
அதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அப்போது எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்த நிலையில் அமெரிக்காவில் இரு சீக்கியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. நியூயார்க் நகரில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அந்த சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் ஜெய்சங்கர் இது
குறித்து தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். "இந்தியாவின் கொள்கைகள் குறித்து கருத்துக் கூற பிற நாடுகளுக்கு உரிமை இருந்தால் அதே அளவிலான உரிமை இந்தியாவுக்கும் உண்டு.
"அமைச்சர் பிளிங்கனின் கருத்தையும் அப்படித்தான் பார்க்கிறேன். இந்தியாவில் உள்ள நிலவரம் குறித்து அவர் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.
"இப்போது அமெரிக்காவில் இரு சீக்கியர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அதை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.
அமெரிக்காவில் நடந்த அமைச்சர்கள் அளவிலான சந்திப்பின்போது மனித உரிமை மீறல் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை," என்றார் ஜெய்சங்கர்.

