புதுடெல்லி: ஜவுளித் துறையில் 19 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ள உற்பத்தி சார்ந்த மானியத் திட்டத்தின் மூலம் அந்தத் துறை பெரும் வளர்ச்சி காணும் என மத்திய ஜவுளித்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், இத்திட்டத்தின் வழி சுமார் 2.4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற துறைகளைப் போல் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வர ஜவுளித்துறைக்கும் மத்திய அரசு உதவும் என்றும் அதற்கான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.
புதிய திட்டத்தின் கீழ் முதலீடு செய்வதற்காக மொத்தம் 67 ஜவுளி நிறுவனங்கள் விண்ணப்பம் அளித்ததாகவும் அவற்றில் 61 நிறுவனங்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.
"இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது ஆண்டுதோறும் ரூ.184,000 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
மெகா முதலீட்டு ஜவுளி பூங்காக்கள் திட்டத்தின் கீழ் இதுவரை 13 மாநிலங்களில் இருந்து 17 விண்ணப்பங்கள் வந்துள்ளன," என்றார் யு.பி.சிங்.
எனினும் முதற்கட்டமாக ஏழு ஜவுளிப் பூங்காக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் நிலவும் சூழ்நிலை குறித்து தெரிந்து கொள்ள மத்திய அரசு அதிகாரிகள் குழு அனுப்பப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா தாக்கத்தால் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள தொழில்துறையினரை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது ஜவுளித்துறைக்கு என புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அந்த துறையைச் சார்்ந்தவர்கள் வரவேற்றுள்ளனர்.

