கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியர்களின் ஆதிக்கம் நீடித்து வருகிறது
புதுடெல்லி: அமெரிக்காவில் கடந்த ஆண்டு 'ஹெச்-1பி' விசாக்களை அதிகம் பெற்றவர்கள் இந்தியர் எனத் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ஒட்டுமொத்த 'ஹெச்-1பி' விசாக்களில் 74 விழுக்காடு விசாக்களை இந்தியர்கள் கைப்பற்றி உள்ளனர். இத்தகவலை அமெரிக்க உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்நாட்டு குடியுரிமை, குடிவரவுச் சேவைகளை வழங்கும் துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 4.07 'ஹெச்-1பி' விசாக்கள் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றுள் 3.01 விசாக்களை இந்தியர்கள் பெற்றுள்ளனர்.
கடந்த 2020ஆம் ஆண்டிலும்கூட 4.26 லட்சம் 'ஹெச்-1பி' விசாக்கள் வழங்கப்பட்டபோது, அவற்றில் இந்தியர்கள் மட்டுமே 3.19 லட்சம் விசாக்களை பெற்றிருந்தனர்.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 'ஹெச்-1பி' விசாக்களைப் பெறுவதில் இந்தியர்களின் ஆதிக்கம் நீடித்து வருகிறது.
சீனாவில் இருந்து 'ஹெச்-1பி' விசாக்களுக்கு அதிக அளவில் விண்ணப்பிக்கப்படுகிறது. எனினும் கடந்த ஆண்டு 50,328 சீனர்களுக்கு மட்டுமே அந்த விசா கிடைத்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 51,597ஆக இருந்தது. கணினித் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்காகவே இந்தியர்களுக்கு 'ஹெச்-1பி' விசாக்கள் அதிக எண்ணிக்கையில் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு கணினி தொடர்பான பணிகளைச் செய்யும் 2.80 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கப்பட்டது.
இது மொத்த எண்ணிக்கையில் 68.8 விழுக்காடு ஆகும். இவர்களில் 56.6% பேர் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் என்றும் 33.7% பேர் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், 6.8% பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். 2.9% பேர் தொழில்நுட்பக் கல்வியில் பட்டம் பெற்றவர்கள் ஆவர். இவர்களின் சராசரி சம்பளம் கடந்த நிதியாண்டைவிட 6.9% உயர்ந்து ரூ.82,08,000 ஆக உள்ளது என ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
உலகளவில் பல்வேறு நாட்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் அமெரிக்கா வழங்கும் 'ஹெச்-1பி' விசாவைப் பெறுவதற்கு கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள். எனினும், இந்தியர்களுக்கே அந்த விசா அதிக எண்ணிக்கையில் கிடைத்து வருகிறது.

