செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
d552b927-b503-487f-9a32-1e6f864fa2b4
-

டெல்லி: மீண்டும் தொற்று அதிகரிப்பு

புதுடெல்லி: மீண்டும் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வருவதையடுத்து, டெல்லியில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படு கிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை டெல்லியில் அன்றாடத் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 137 இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த எண்ணிக்கை 325ஆக அதிகரித்தது. எனினும் பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை விதிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வரும் 20ஆம் தேதி கூட உள்ளது.

பருவ மழை 99 விழுக்காடு பெய்யும்

புதுடெல்லி: இந்தியாவில் நடப்பாண்டு 99% பருவ மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழை பெய்யும். "இம்முறை வழக்கமான மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம். சராசரியாக 99 விழுக்காடு மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது," என்று அம்மையம் கூறியுள்ளது. இதற்கிடையே, தென் தமிழக கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களிலும் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கத்தால் மக்கள் பீதி

இடாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் நேற்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் பீதி அடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தை பாங்கின் பகுதி மக்கள் பரவலாக உணர்ந்தனர். இந்த நிலநடுக்கத்தில் உயிருடற் சேதங்கள் ஏதும் ஏற்பட்டதாக அதிகாரபூர்வத் தகவல் ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக, நேற்று காலை சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருணாச்சலப் பிரதேசத்தில் உணரப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

144 தடை உத்தரவுக்கு மத்தியில் பெண்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கார்கோன் பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், நேற்று முன்தினம் அங்கு பெண்கள் மட்டும் வெளியே செல்லும் வகையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அண்மையில் நிகழ்ந்த கலவரம் காரணமாக கடந்த சில தினங்களாக அப்பகுதியில் ஊரடங்கு நீடித்து வருகிறது. இந்நிலையில், அத்தியாவசியப் பொருள்களை வாங்க, நேற்று முன்தினம் காலை 9 முதல் 11 மணி வரை, வீட்டுக்கு ஒரு பெண் மட்டும் வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஏராளமான பெண்கள் திரண்டு வந்து தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனர்.