கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா பதவி விலகினார்

கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா பதவி விலகினார்

1 mins read
0d77edb1-f76d-4598-a705-a9bc3d2cf5b8
-

சென்னை: ஒப்பந்ததாரர் உயிரை மாய்த்துக்கொண்டது தொடர்பாக கர்நாடக கிராம வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா காவல்துறை வழக்குப்பதிவு செய்ததை அடுத்து, அவர் தமது பதவியில் இருந்து விலகி உள்ளார்.

இந்நிலையில், அவரைக் கைது செய்ய வேண்டுமென காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

கிராம வளர்ச்சித்துறை, பஞ்சாயத்துராஜ் துறைகள் சார்ந்த திட்டப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல், தம்மிடம் அமைச்சர் ஈஸ்வரப்பா மொத்தத் தொகையில் 40 விழுக்காடு லஞ்சம் கேட்டதாகக் குற்றம் சாட்டினார்.

அவரது இந்தப் பகிரங்கக் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தங்கு விடுதி ஒன்றில் தங்கி இருந்தபோது அவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.

மேலும், தமது இந்த முடிவுக்கு அமைச்சர் ஈஸ்வரப்பா தான் காரணம் என்றும் கடிதம் எழுதி வைத்திருந்தார்.

இதனால் ஈஸ்வரப்பாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்க வேண்டியிருந்தது.

ஆனால் எதிர்க்கட்சியான காங்கிரசோ, அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதற்கிடையே, ஈஸ்வரப்பா அமைச்சர் பதவியில் இருந்து விலகியதை பாஜக அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவாகக் கருதக்கூடாது என்று கர்நாடக முதல்வர் பவசராஜ் பொம்மை கூறியுள்ளார்.

உண்மை ஒருநாள் நிச்சயம் வெளிவரும் என்று அவர் தெரிவித்தார்.

ஒப்பந்ததாரர் தொடர்பான வழக்கு சட்டப்படி நடைபெறும் என்றும் முதல்வர் பசவராஜ் கூறினார்.