புதுடெல்லி: கடும் பொருளியல் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மீண்டும் இந்தியாவிடம் நிதி உதவி கோரியுள்ளது. இம்முறை குறைந்தபட்சம் 200 கோடி டாலர் தேவை என அந்நாடு கேட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்தியாவுக்கான இலங்கை தூதர் மிலிண்டா மொராகோடா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று முன்தினம் புதுடெல்லியில் சந்தித்துப் பேசினார்.
அப்போது இந்தியா, இலங்கை இடையேயான பொருளாதார கூட்டுறவு நிலவரம் குறித்தும் இந்தியாவின் உதவியை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, உடனடி தேவைக்காக இலங்கை தரப்பு 200 கோடி அமெரிக்க டாலர் கேட்டிருப்பதாகவும் அந்நாட்டில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க இந்தத் தொகையை அளிக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவிடம் இருந்து புதி தாகப் பெறும் கடன் தொகையைக் கொண்டு ஆசியான் கிளியரிங் யூனியனுக்கு செலுத்த வேண்டிய தொகையை ஈடுகட்ட இலங்கை அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் பொருளாதார திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து அனைத்துலக நிதியத்திடம் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் நிதி தேவைக்கேற்ப இலங்கைக்கு கைகொடுத்து உதவிய முதல் நாடாக இந்தியா இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

