மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சோற்றில் உப்பு அதிகமாக இருந்ததற்காக ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தானே மாவட்டம் பஹண்ட்ரா கிழக்குப் பகுதியில் நிர்மலாவும் அவரது கணவர் நிலீஷ் ஷஹ்க்கும், 46, வசித்து வருகின்றனர்.
சென்ற வெள்ளிக்கிழமை அன்று காலை கணவர் நிலீஷுக்கு நிர்மலா உணவு பரிமாறியுள்ளார். சோறு போட்டு, காய்கறிக் கூட்டு அடங்கிய உணவை நிர்மலா பரிமாறினார்.
அப்போது நிலீஷ் உணவை ரசித்துச் சாப்பிட ஆரம்பித்தார். உணவில் உப்பு சற்று அதிகமாக இருந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த கணவன் நிலீஷ், மனைவியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றியது.
மனைவியை நிலீஷ் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
பின்னர் கோபத்தின் உச்சத்துக்குச் சென்ற நிலிஷ், அங்கிருந்த ஒரு துணியை எடுத்து மனைவியின் கழுத்தை நெரித்துள்ளார். இதனால் மூச்சுவிட முடியாமல் துடித்த நிர்மலா உயிரிழந்தார்.
அதன் பிறகு நிலீஷ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இந்தச் சம்பவம் பற்றி தகவல் அறிந்த காவல்துறை, அங்கு வந்து நிர்மலாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது.
தீவிர விசாரணை நடத்திய காவல் துறையினர் தப்பியோடிய நிலீஷை கைது செய்தனர்.
அவர் மீது விரைவில் குற்றம்சாட்டப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

