ஒவ்வொரு மாவட்டத்திலும்
மருத்துவக் கல்லூரி: மோடி
புதுடெல்லி: ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன மருத்துவ மனையை பிரதமர் மோடி நேற்று காணொளிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, மருத்துவ சிகிச்சை செலவு குறித்து மக்களிடையே கவலை அதிகம் உள்ளது. மருத்துவச் செலவில் இருந்து மக்களுக்கு விடுதலை அளிக்கும் வகையில் அனைத்து கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன," என்று பிரதமர் மோடி சொன்னார்.
சத்ருகன் சின்ஹா வெற்றி
கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலம் அசன்சோல் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜியின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹாவும்(படம்), பாஜக சார்பில் எம்.எல்.ஏ.வான அக்னிமித்ரா பவுலும் போட்டியிட்டனர். அசன்சோல் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்தே சத்ருகன் சின்ஹா முன்னணியில் இருந்தார்.
இறுதியில் சத்ருகன் சின்ஹா இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய சத்ருகன் சின்ஹா "வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவராக இருப்பார்," என்று குறிப்பிட்டார்.

