புதுடெல்லி: கொவிட்-19 கொள்ளைநோயால் இந்தியாவில் 2021 இறுதிவரை 4 மில்லியன் பேர் மாண்டிருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கு இந்தியா மறுப்புத் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்று காரண மாக 521,751 பேர் இறந்ததாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் அந்த எண்ணிக்கை 4 மில்லியனாக இருக்கக்கூடும் என 'நியூயார்க் டைம்ஸ்' சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் கொவிட்-19 இறப்புகளை கணக்கிடுவதில் சிக்கல்கள் உள்ளதாகவும் இதுதொடர்பான தனது முயற்சிகளை இந்தியா தடுப்பதாகவும் அந்நிறுவனம் கூறி உள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், "சில நாடுகள் தரும் கொரோனா மரண எண்ணிக்கை விவரங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் உலக சுகாதார நிறுவனம், இந்தியா போன்ற நாடுகளின் விவரங்களை கணிதவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் வழங்குமாறு கூறுகிறது.
மக்கள்தொகை மிகுந்த, வெவ்வேறு புவியியல் அமைப்பு கொண்ட ஒரு நாட்டில் சிறு நாடுகளில் பயன்படுத்தப்படும் கணிதவியல் முறையைப் பின்பற்றுவது கடினம். எனவே உலக சுகாதார நிறுவனத்தின் மரண கணக்கீட்டு முறை இந்தியாவுக்குப் பொருந்தாது.
இந்தியாவின் 18 மாநிலங்களில் இருந்து தவறான தரவுகளை பெற்றிருப்பதால் அந்நிறுவனம் தெரிவித்திருக்கும் விவரம் சரியானதல்ல. மேலும், உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்பு முற்றிலும் உண்மை என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் இல்லை," என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், 4 மில்லியன் இந்தியர்கள் மாண்டிருக்கலாம் என்னும் கருத்தை காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆதரித்து டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

