அமராவதி: அனுமன் ஜெயந்தி ஊர்வலங்களின் மீது தாக்குதல் நடத்தப்படுவது நீடித்து வருகிறது. டெல்லி, கர்நாடகாவைத் தொடர்ந்து ஆந்திரா, உத்தரகாண்ட் மாநிலங்களிலும் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில், இருபது பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த சில தினங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சமய ஊர்வலங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படுவதால் நாடு தழுவிய அளவில் பாதுகாப்புப் படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஆலூர் ஹொளகுண்டா, இரலகட்டா ஆகிய இடங்களில் அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. அப்போது ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது சிலர் திடீரென கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இது தொடர்பான காணொளிப்பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானது. அதை வைத்து சந்தேகத்தின் பேரில் இருபது பேர் கைதாகினர்.
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவார் மாவட்டத்தில் உள்ள பகவான்பூர் கிராமத்திலும் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் மீது அடையாளம் தெரியாத சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவியது.
தாக்குதல் குறித்து தகவல் அறிந்த சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மொத்தமாகத் திரண்டனர். தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி ஆவேசமாக முழக்கங்கள் எழுப்பிய அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தினர்.
இதற்கிடையே, டெல்லியில் வன்முறையைத் தூண்டிவிடக் காரணமான முக்கிய குற்றவாளி காவல்துறையிடம் சிக்கினார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதையடுத்து இத்தகைய தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

