22 மாவட்டங்களைச் சேர்ந்த நூறாயிரம் பேர் பாதிப்பு; இருபதாயிரம் வீடுகள் சேதம்
கௌஹாத்தி: கடந்த ஐந்து நாள்களாக நீடிக்கும் கனமழை காரணமாக அசாம் மாநிலம் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அங்கு இடி, மின்னல் தாக்கி இதுவரை இருபது பேர் பலியாகிவிட்டனர்.
மேலும், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. சுமார் நூறாயிரம் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 14ஆம் தேதி அசாமை புயல் தாக்கியது. அன்றைய தினம் பலத்த புயல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற அஞ்சி முடங்கிப் போயினர்.
புயலுக்குப் பிறகும் மழை ஓய்ந்தபாடில்லை. 14ஆம் தேதி தொடங்கி அடுத்த மூன்று நாள் கொட்டித்தீர்த்த கனமழையால் 1,410 கிராமங்கள் பாதிக்கப்பட்டன.
இக்கிராமங்களை உள்ளடக்கிய 80 வருவாய் வட்டங்களைக் கொண்ட 22 மாவட்டங்களில் புயல், கனமழை, இடி, மின்னலுடன் தொடர்புடைய பல்வேறு சம்பவங்கள் பதிவாகி உள்ளன. கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்தே அசாமில் அவ்வப்போது கனமழை மிரட்டி வருவதாகச் சொல்கிறார் அம்மாநிலத்தின் பேரிடர் மேலாண்மைக் கழகத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரிபாதி.
"கடந்த 14ஆம் தேதி அசாமின் பல்வேறு பகுதிகளில் பலத்த வேகத்துடன் புயல் காற்று வீசத் தொடங்கியதுடன் இடி, மின்னலும் தாக்கியது. இதனால் சுமார் நூறாயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
"இந்த மாவட்டங்களில் மொத்தம் 1,333 ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் சேதமடைந்து உள்ளன," என்றார் திரிபாதி.
இதற்கிடையே, தொடர் மழை காரணமாக அசாமில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. சுமார் இருபதாயிரம் வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதால் நிவாரணப் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன. இதனால் வெள்ளப்பெருக்கு உள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தின்சுகியா, திப்ரூகர் உள்ளிட்ட மாவட்டங்கள் புயலால் அதிகம் சேதமடைந்துள்ள நிலையில், 20 பேர் பலியாகிவிட்டனர்.
புயல், மழையால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து மாநில அரசு அறிக்கை தயாரித்து வருகிறது.
மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் ஆய்வு மேற்கொள்ளும் என்றும் அந்தக் குழுக்கள் அளிக்கும் ஆலோசனைகளின்படி உரிய நிவாரணத் தொகைகள் அறிவிக்கப்படும் என்றும் அசாம் அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

