ஏழு வயதுச் சிறுவனைக் கடித்துக் கொன்ற சிறுத்தைப்புலி
இடாநகர்: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏழு வயதுச் சிறுவனை சிறுத்தைப்புலி கடித்துக்கொன்ற சம்பவம் அங்குள்ள தேரி மாவட்டம், அகோரி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்தக் கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுத்தைப்புலி ஒன்று புகுந்து வீட்டு முற்றத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஏழு வயதுச் சிறுவனை இழுத்துச் சென்றது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோரும் கிராம மக்களும் அவனை மீட்க முயன்றனர். அதற்குள் ஒரு புதருக்குள் சிறுவனை இழுத்துச் சென்ற சிறுத்தைப்புலி, அவனைக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றது. அதையடுத்து, அந்தப் புலியை சுட்டுக்கொல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உக்ரேனுக்கு உணவுப்பொருள்களை ஏற்றுமதி செய்ய இந்தியாவுக்கு வாய்ப்பு
புதுடெல்லி: உக்ரேன் விவகாரம் காரணமாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடனான வர்த்தக நடவடிக்கைகளைத் துண்டித்துக்கொண்டதை அடுத்து, இந்திய ஏற்றுமதி யாளர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்கு உணவுப் பொருள்கள் அதிக அளவில் ஏற்றுமதியாகும் என்றும் குறிப்பாக, மசாலா பொருள்கள், சீனி, பருப்பு, எண்ணெய், அரிசி உள்ளிட்ட பொருள்களை இந்திய வர்த்தகர்களால் அனுப்ப முடியும் எனவும் கூறப்படுகிறது. இந்த வர்த்தகத்தில் டாலருக்குப் பதிலாக இந்திய ரூபாய், ரூபிள் ஆகியவற்றை வைத்து பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ள தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த அறிவிப்பானது, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும் என பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யும் சிவசேனா
மும்பை: பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையேயான மோதல் வலுத்து வரும் நிலையில், பாஜக அல்லாத மாநில முதல்வர்களின் கூட்டத்தை நடத்த சிவசேனா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நடப்பு அரசின் நிலவரம், அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக அக்கட்சி எம்பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார். "இந்தக் கூட்டத்தை மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக பாஜக அல்லாத முதல்வர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே ஆகியோரும் இது தொடர்பாக விவாதித்துள்ளனர். வகுப்புவாத மோதலைத் தூண்டுவது, மத்திய புலனாய்வு அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்," என்று சஞ்சய் ராவத் மேலும் தெரிவித்துள்ளார்.
கேரள நிதி அமைச்சர் சென்ற காரின் டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு
திருவனந்தபுரம்: கேரள நிதி அமைச்சரின் காரில் இருந்த டயர் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு நிதி அமைச்சர் பாலகோபால் காரில் சென்றுகொண்டிருந்தார். குருவன்கோணம் பகுதி அருகே சென்றபோது, அவரது காரின் பின்பக்க டயர் திடீரெனக் கழன்று ஓடியதை அடுத்து, கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கும் இங்குமாக அலைமோதி, இறுதியில் சாலையோரம் மோதி நின்றது. இந்த விபத்தில் அமைச்சர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விசாரணையில், அமைச்சர் பயன்படுத்திய கார் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
ஆஷிஷ் மிஷ்ரா பிணை ரத்து
புதுடெல்லி: லக்கிம்பூர் வன்முறைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மத்திய இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஷ்ராவுக்கு அளிக்கப்பட்ட பிணையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆஷிஷ் மிஸ்ரா ஒரு வாரத்திற்குள் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அலகாபாத் நீதிமன்றம் இந்த வழக்கில் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி பிணை வழங்கியது.
ஜீப், லாரி மோதி ஆறு பேர் பலி
லக்னோ: ஜீப் வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் ஆறு பேர் பலியாகினர். உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற சிலர், ஜீப் வாகனத்தில் அமேதி நகருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது நெடுஞ்சாலையில் எதிரே வந்த லாரி மீது இந்த ஜீப் மோதியது. இதில் ஜீப்பில் இருந்த ஆறு பேர் சம்பவ இடத்தி லேயே பலியாகினர். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

