மூன்று நாள்களாக சோனியா வீட்டில் கூடிய மூத்த தலைவர்கள்
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைமைக்கும் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருக்கும் இடையேயான ஆலோசனை தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் நீடித்தது.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டில் நடைபெற்று வரும் இந்த தொடர் ஆலோசனையின்போது இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் கருத்து பரிமாற்றங்கள் நடந்ததாகத் தெரிகிறது.
வெளிநாடு சென்றிருப்பதால் ராகுல் காந்தி இந்த ஆலோசனையில் பங்கேற்கவில்லை. பிரியங்கா காந்தி, வேணுகோபால், ரன்தீப் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக், ப.சிதம்பரம், அம்பிகா சோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் தேர்தல் களங்களில் ராகுல் காந்தியை காங்கிரசின் முகமாக முன்னிறுத்துவது என முடிவாகி உள்ளது என்றும் நிர்வாக, அமைப்பு ரீதியிலான பணிகளைபிரியங்கா கவனிப்பார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வியூகத்தை பிரசாந்த் கிஷோர்தான் வகுத்துள்ளார் என்றும், தேர்தல் வியூக நிபுணராக காங்கிரஸ் கட்சித் தலைமை அவருடன் ஒப்பந்தம் செய்துகொண்ட பிறகு அவர் முழு வீச்சில் களமிறங்குவார் என்றும் கூறப்படுகிறது.
கடந்த மூன்று நாள்களாக நீடித்த ஆலோசனைக்குப் பிறகு, முதன் முறையாக பிரசாந்த் கிஷோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
எனினும் மேலதிக தகவல்களை வெளியிட அக்கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா மறுத்துவிட்டதாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோரை இணைத்துக்கொள்வது குறித்து அடுத்த ஒரு வாரத்துக்குள் முடிவெடுக்கப்படும் என்று கட்சியின் மூத்த தலைவர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு முழுநேர தலைவர் தேவை என அக்கட்சியின் அதிருப்தி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கட்சித் தலைமையின் செயல்பாடுகளையும் அவர்கள் விமர்சித்து வரும் நிலையில், பிரசாந்த் கிஷோருடனான கலந்தாலோசனை குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

