செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
9606100e-7ba5-432b-8720-76f334ad0ad2
-

காஷ்மீரைச் சேர்ந்த அஷிக் அகமது நெங்ரூ பயங்கரவாதியாக அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான அஷிக் அகமது நெங்ரூ பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர். 34 வயதான அஷிக் அகமது நெங்ரூ

பாகிஸ்தானின் கைப்பாவையாகச் செயல்பட்டு வருவதாகவும் கடந்த 2013ஆம் ஆண்டு புல்வாமாவில் காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்டது உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல் நடவடிக்கைகளுக்கு நெங்ரூதான் திட்டமிட்டுள்ளார் என்றும் மத்திய உள்துறை அமைச்சு கூறியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகைமை நெங்ரூவின் குடும்பத்தாருக்கு விசாரணை தொடர்பில் அழைப்பாணை அனுப்பியது. அதன் பிறகு அவர் திடீரென மாயமானதை அடுத்து, அவர் பயங்கரவாதிகளின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்.

ஒரே நிதியாண்டில் சாதனை அளவாக 167,000 நிறுவனங்கள் பதிவு

புதுடெல்லி: ஒரே நிதியாண்டில் 167,000 நிறுவனங்களை பதிவு செய்துள்ளதாக கார்ப்பரேட் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது ஒரு சாதனை என்றும் 2021-22 நிதியாண்டில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது என்றும் அந்த அமைச்சு கூறியுள்ளது. முந்திய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இப்போது பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது என்றும் கடந்த நிதியாண்டை விட, 2021-22 நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 8 விழுக்காடு அதிகம் என்றும் அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. இந்த நிதியாண்டில் 31,107 நிறுவனங்களுடன் அதிக பதிவு செய்யப்பட்ட மாநிலமாக மராட்டியம் உள்ளது.

இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம்

புதுடெல்லி: இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டே அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய ராணுவத்தின் கிழக்குப் பிரிவு, அந்தமான் நிக்கோபார் பிரிவு ஆகியவற்றின் கட்டளைத் தளபதியாகப் பணியாற்றிய அனுபவம் உள்ள மனோஜ் பாண்டே, அடிப்படையில் பொறியியலாளர் ஆவார். ராணுவத்தில் பொறியியலாளராகப் பணியாற்றிய ஒருவர் அதன் தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. நாக்பூரைச் சேர்ந்த மனோஜ் பாண்டே, தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்றவர் ஆவார்.

ரயில்வே துறையை மேம்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது என சிஏஜி அறிக்கை

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

புதுடெல்லி: ரயில்வே துறையை மேம்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரயில்களின் வேகமும் சரியான நேரத்தில் இலக்கை அடையும் விகிதமும் வெகுவாக குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. ரயில்வே துறை ஆண்டுதோறும் சராசரியாக 200 ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தினாலும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில்லை என்றும் ரயில்களின் சராசரி வேகத்தை மணிக்கு 50ல் இருந்து 75 கிலோ மீட்டராக உயர்த்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டாலும் உட்கட்டமைப்பு குறைபாடுகளால் வேகம் உயரவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-