புதுடெல்லி: கொரோனா நெருக்கடிக்குப் பின்னர் இந்தியாவில் விமானப் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை அன்று விமானப் பயணிகளின் எண்ணிக்கை நூனூராயிரத்தை (400,000) எட்டியதாகவும் அது தமது அமைச்சுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, தமது அமைச்சு உள்நாட்டு, வெளிநாட்டு விமானப் பயணிகளுக்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், சுகாதார அமைச்சு புதிய நெறிமுறைகளை தயார் செய்துள்ளது. அது இணையத்தளங்களில் வெளியாகி உள்ளது.
"வெளிநாட்டுப் பயணிகள் தங்களது கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் அல்லது பயணத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்பு கொரோனாவுக்கான 'ஆர்டிபிசிஆர்' (RTPCR) பரிசோதனை செய்து கொண்ட விவரத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
"உள்நாட்டுப் பயணிகளுக்கு இந்தப் பரிசோதனை அறிக்கை தேவை இல்லை. எனினும் மாநில அரசுகள் சூழ்நிலைக்கு ஏற்ப சில கட்டுப்பாடுகளை விதிக்க அனுமதி உண்டு.
"நடப்பு கொரோனா பாதிப்பு நிலவரத்தை கவனத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகள் விரும்பக்கூடும். அதற்கான உரிமை அந்த அரசுகளுக்கு உள்ளது," என்றார் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா.
தொற்றுப் பரவல் வெகுவாகக் குறைந்துள்ளதை அடுத்து, இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளன.
குறிப்பாக உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொள்வதற்கான கடுமையான நடைமுறைகள் அகற்றப்பட்டதை அடுத்து, ஏராளமானோர் ஆர்வத்துடன் பயணம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

