புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்பூரியில் சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்கப்படுவதை உச்ச நீதி மன்றம் இரண்டாவது முறையாக தலையிட்டு நிறுத்த உத்தரவிட்டது.
கட்டடங்களை இடிக்க நீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்தபோதும் நேற்றுக் காலை கட்டடங் களை இடிக்கும் பணி ஆரம்பிக்கப் பட்டது. ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக கட்டடங்களை இடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது.
இந்த நிலையில் இந்த விவ காரம் மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து நகர மேயர், ஆணையர், நகர காவல்துறை ஆணையர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கு தடை குறித்து தகவல் தெரிவிக்கும்படி உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதனால் ஜஹாங்கிர்பூரியில் கட்டடங்களை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையை, உச்ச நீதிமன்றம் மறுநாள் (இன்று) ஒத்திவைத்தது.
கடந்த சனிக்கிழமை நடந்த மதக் கலவரத்தைத் தொடர்ந்து ஜஹாங்கிர்பூரியில் அத்துமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்க வடக்கு டெல்லி மாநகராட்சி உத்தரவிட்டது.
அனுமன் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஜஹாங்கிர்பூரியில் உள்ள இந்து மதத்தினர் பேரணியாகச் சென்றனர். இதற்கு காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது. எனினும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சி-பிளாக் பகுதி வழியாக பேரணி சென்றபோது கல் வீசப்பட்டது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற் பட்டது.
இந்த மோதலைத் தடுக்க முயற்சி செய்த காவல்துறை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடைபெற்றன. இதில் காவல்துறை அதிகாரிகளும் படுகாயமடைந்தனர். இதனால் அப் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்ட இரு பிரிவுகளையும் சேர்ந்த 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் ஐவர் மீது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 14 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
"குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்தப் பிரிவு, எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எந்த விதமான பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.
"கண்காணிப்புக் கேமராவை ஆராய்ந்து வருகிறோம். வதந்திகள் பரப்பி அமைதியை சீர்குலைப்பதைத் தடுக்க சமூக வலைத்தளங்களையும் கண்காணித்து வருகிறோம்," என்று டெல்லி காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா கூறியுள்ளார்.

