இளையராஜாவுக்கு மோடி நன்றி
புதுடெல்லி: இசையமையாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய அணிந்துரையில் "பிரதமர் மோடி ஆட்சியில் பல திட்டங்கள், அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை. பெண்கள், விளிம்புநிலை மக்களுக்கான பல திட்டங்களை மோடி அரசு வகுத்து உள்ளது. 'முத்தலாக்' தடைச் சட்டம் உள்பட சட்டங்கள் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களை நினைத்து அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார்," என பாராட்டி எழுதியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்தனர். இந்த நிலையில் இளைய ராஜாவை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்துப் பேசிய பிரதமர் மோடி, தன்னை அம்பேத் கருடன் ஒப்பிட்டு பாராட்டியதற்கும் தன்னை பற்றி அணிந்துரை எழுதியதற்கும் நன்றி தெரிவித்தார்.
இதற்கிடையே பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்று இயக்குநர் பாக்யராஜ் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் தேர்தல் வியூகம்
புதுடெல்லி: இந்திய அரசியலில் பல மாற்றங்களுக்கும் புதிய புரட்சிகளுக்கும் வித்திட்டவர் பி.கே. எனும் பிரஷாந்த் கிஷோர். மேற்கு வங்காளத்தில் மம்தா மீண்டும் அரியணை ஏறவும் தமிழகத்தில் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு ஆலோசனை வழங்கியவருமான அவர், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியையும் அரியணையில் ஏற்றியுள்ளார். 2014ஆம் ஆண்டில் பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி வரக் காரணமே பி.கே. வகுத்துக் கொடுத்த உத்திகள். இந்த நிலையில் வரும் நாடாளுமன்றத் ேதர்தலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு பிரஷாந்த் கிஷோர் திட்டம் தயாரித்துக் கொடுத்துள்ளார். அதன்படி வலுவான கூட்டணியுடன் 370 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடும் எனத் தெரிகிறது.
சிறுமியைச் சீரழித்த 74 பேர் கைது
குண்டூர்: ஆந்திரா மாநிலத்தில் குண்டூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் தாயார் ஒருவர், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜனவரியில் உயிரிழந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் தாயாருக்கு உதவியாக இருந்த சொர்ணகுமாரி என்பவர் தந்தையின் ஆதரவுடன் சிறுமியை தத்தெடுத்துக் கொண்டார். ஆனால் சொர்ண குமாரி சிறுமியை ஊர் ஊராக அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கிறார். அந்தக் கும்பலிடம் இருந்து தப்பி வந்த சிறுமி தனது தந்தையிடம் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை உடனே காவல் நிலையத்தில் புகார் அளிக்க, சொர்ணகுமாரி கைது செய்யப்பட்டார். சிறுமியை சீரழித்ததாக அடையாளம் காணப்பட்ட 80 பேரில்74 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

