விஜயவாடா: நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய நடிகையும் எம்எல்ஏவுமான ஆர்கே ரோஜா அண்மையில் ஆந்திராவின் சுற்றுலா, கலாசார, இளையர்நல அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து புதன்கிழமை அன்று அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அவர், ஆந்திராவை சிறந்த சுற்றுலாத் தளமாக மாற்றுவேன் என்று சூளுரைத்துள்ளார். கண்டிகோட்டா-பெங்களூரு பேருந்து சேவைக்கான கோப்பில் அவர் அமைச்சராக முதல் கை யெழுத்தைப் போட்டு அச்சேவை யைத் தொடங்கிவைத்தார்.
பின்னர் பேசிய ஆர்கே. ரோஜா, இந்தியாவிலேயே முதன்மை சுற்றுலா மையமாக ஆந்திராவை உருவாக்குவேன் என்றும் அதற்கான பல திட்டங்களை சுற்றுலாத் துறை ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்றும் கூறினார். தமக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கிய ஆந்திரா முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டிக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இதற்கிடையே அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவரது சொந்தத் தொகுதியான நகரிக்கு முதல் முறையாக செவ்வாய்க் கிழமை மாலை சென்றார். திறந்தவேனில் நின்றபடி அவர் மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அந்த ஊர் மக்கள் தெருவின் இரு பக்கமும் வரிசையாக நின்று அவரை மலர் தூவி வரவேற்றனர். பளூதூக்கி மூலம் அவருக்கு ராட்சத ரோஜா மாலை அணிவிக்கப்பட்டது.
இதை அன்புடன் ஏற்றுக் கொண்ட ஆர்கே ரோஜா நேற்று திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானையும் தரிசித்தார்.
'செம்பருத்தி' படத்தின் மூலம் தமிழ் திரைத் துறையுலகுக்கு அறி முகமானவர் நடிகை ரோஜா. முதலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்த இவர், பின்னர் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் இணைத்துக்கொண்டார். ஜெகன் மோகன் கட்சியின் மகளிர் அணித் தலைவியாகவும் அவர் உள்ளார்.

