அகமதாபாத்: இந்தியாவுக்கு இரண்டு நாள் வருகை மேற்கொண்ட பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், குஜராத் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று டெல்லி சென்றார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பின்னர் இரண்டு பிரதமர்களும் கூட்டாகச் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது பேசிய பிரிட்டிஷ் பிரதமர், "போர் விமானத் தயாரிப்புத் தொழில்நுட்பம் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளப்படும். எரிசக்தி பாதுகாப்பில் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்றார். "இந்தியா - பிரிட்டனுக்கு இடையே உள்ள நல்லுறவை, மேலும் பல வழிகளில் வலுப்படுத்தும் வகையில், தாராள வர்த்தக ஒப்பந்தம், இந்தோ-பசிபிக் விவகாரத்தில் ஒத்துழைப்பு, பாதுகாப்பு தொடர்பான உறவை வலுப்படுத்துவது ஆகியவை பற்றி கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம்," என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார். "இந்தாண்டுக்குள் தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்ற நம்பிக்கை உள்ளது," என்றார் ஜான்சன்.
மேலும் அவர் கூறுகையில், "தகவல் தொழில்நுட்பம், கணினி மென்பொருள் உட்பட பல துறைகளில் பிரிட்டனில் ஆயிரக்கணக்கான நிபுணர்கள், பணியாளர்களுக்குத் தேவை உள்ளது. இந்த தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், இந்தியர்களுக்கு அதிக அளவில் வேலை அனுமதி விசா வழங்கத் தயாராக உள்ளோம்.
"உக்ரேன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியுடன், எங்கள் நாட்டு அதிகாரிகள் ஏற்கெனவே துாதரக அளவில் பேச்சு நடத்தியுள்ளனர். இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே வரலாற்றுப் பூர்வமான நட்புறவு இருப்பது அனைவருக்கும் தெரியும்," என்றார் ஜான்சன். பின்னர் பேசிய பிரதமர் மோடி, "பிரிட்டனின் முதலீடுகளை இந்தியா வரவேற்கிறது," என்றார். இரண்டு நாள் பயணமாக மேற்கொண்டு நேற்று முன்தினம் இந்தியா வந்த பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து அவர் தங்கியிருந்த தங்கும் விடுதி வரை 4 கி.மீ. தூரத்துக்கு மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

