லூதியானா: ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களையும்; டெல்லியையும் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்திலும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை அம்மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து, டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என கடந்த வாரம் அறிவித்தன.
இந்நிலையில், பஞ்சாப் மாநில அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், "கடந்த சில நாள்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்படுகிறது. குறிப்பாக, பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து, திரையரங்குகள், கடைத்தொகுதிகள், பள்ளி வகுப்பறைகள் உட்பட மக்கள் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்" என கூறப்பட்டுள்ளது. பஞ்சாபில் நேற்று முன்தினம் நிலவரப்படி 24 மணி நேரத்தில் 30 புதிய தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்தியா முழுவதும் 2,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 4வது அலைக்கு அறிகுறியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

