செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
873d0391-747e-4145-bf6d-31544add5195
-

நாயை கொன்றவர்கள்மீது வழக்கு

புதுச்சேரி: புதுச்சேரியில் நெட்டப்பாக்கம் அடுத்த மதுகரை முத்து நகரைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி மகாலட்சுமி, வீட்டில் நாய் வளர்த்து வருகிறார். இவரது நாய் அவ்வழியாக செல்பவர்களைப் பார்த்து குரைத்துக்கொண்டே இருந்ததாகத் தெரிகிறது.

எனவே, எரிச்சலடைந்த, 54 வயது கந்தன், அவரது மகன் மதன், கோகுல் ஆகிய மூவரும் மகாலட்சுமியின் நாயை அடித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, மகாலட்சுமி அளித்த புகாரின் பேரில் கந்தன் உள்ளிட்ட 3 பேர் மீது நெட்டப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கொவி‌ஷீல்ட் தயாரிப்பு நிறுத்தம்

புதுடெல்லி: நூறு கோடிக்கும் அதிகமான கொவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளைத் தயாரித்த சீரம் நிறுவனம், போதிய அளவு இல்லாததால் தடுப்பூசி தயாரிப்புப் பணிகளை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டைம்ஸ் நெட்வொர்க் மீடியா குழு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய சீரம் நிறுவனத் தலைவர் ஆதார் பூனாவல்லா, "எங்களிடம் தற்போது 20 கோடி கொரோனா தடுப்பூசிகள் விற்பனையாகாமல் உள்ளன. அவற்றை என்ன செய்வது என்று தெரியவில்லை. அவை காலாவதி ஆகிவிடும் என்பதால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே தடுப்பூசி தயாரிப்பை நிறுத்திவிட்டோம்," என்று கூறினார். இந்தியா முழுவதும் இதுவரை 187 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டை சிவசேனா முற்றுகை

மும்பை: மகாராஷ்டிரா வில் வழிபாட்டுத் தலங்களில் ஒலி பெருக்கி பயன் படுத்தும் விவகாரம் தொடர்பாக, மும்பை யில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வீட்டுமுன் அனுமன் பாடல்களைப் பாடப்போவதாக அமராவதி தொகுதி பெண் நாடாளுமன்ற உறுப்பினர் நவநீத் ராணாவும் அவர் கணவரும் சுயேச்சை எம்எல்ஏவுமான ரவிராணா ஆகியோர் அறிவித்தனர். இதையடுத்து முதலமைச்சர் வீட்டுமுன் காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் நவநீத் ராணாவின் வீட்டை முற்றுகையிட்ட சிவசேனா தொண்டர்கள் அவருக்கு எதிராக முழக்கமிட்டனர். படம்: இணையம்