புதுடெல்லி: இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்காக பாகிஸ்தான் செல்லவேண்டாம் என்றும் அங்கு பெறும் பட்டம் இந்தியாவில் செல்லுபடியாகாது என, யுஜிசி எனும் பல்கலைக்கழக மானியக் குழுவும் 'ஏஐசிடிஇ' எனும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுவும் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக கூட்டாக இவை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பாகிஸ்தானில் உயர்கல்வி பயில யாரும் செல்ல வேண்டாம். இந்தியர்களோ அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்களோ பாகிஸ்தானில் மேற்படிப்பு பயின்றால் அவர்களது பட்டம் இந்தியாவில் செல்லாது. மேலும் இந்தியாவில் அவர்கள் வேலைவாய்ப்பு பெறவும் முடி
யாது.
இருப்பினும், அகதிகள் யாரேனும் பாகிஸ்தானில் உயர்கல்வி பெற்றிருந்தால், இந்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஒப்புதல் பெற்று இந்தியாவில் குடியுரிமை பெற்ற பின்னர், அவர்கள் இந்தியாவில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விளக்கமளித்துள்ள ஏஐசிடிஇ தலைவர் பேராசிரியர் அனில் டி. சஹஸ்ரபுதே, "பாகிஸ்தானில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களின் தரமும் கேள்வியாக உள்ளது. ஏற்கெனவே சீனா, உக்ரேன் என வெளிநாட்டில் பயின்ற மாணவர்கள் சில பிரச்சினைகளால் கல்வி தடைப்பட்டு நிற்கின்றனர். எனவே, பெற்றோர், மாணவர் நலன் கருதி இதனைக் கூறியுள்ளோம்," என்றார்.
இதற்கு கல்வியாளர்கள் தரப்பில் ஒருபுறம் கண்டனக் குரலும் எழுந்து வருகிறது. எல்லா வெளிநாடுகளைப் போலவே பாகிஸ்தானையும் பாவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.