செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
6dd6dce6-020b-4a93-9c85-43dca45138fb
-

ஒேர மாதத்தில் ஒரு கோடியே ஆறு லட்சம் பேர் விமானப் பயணம்

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் ஒரு கோடியே ஆறு லட்சம் பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இதனை பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிட்டால் 38 விழுக்காடு அதிகமாகும். அனைத்துலக விமானப் போக்குவரத்துக்கான தடை நீக்கப்பட்டதை அடுத்து, வெளிநாடுகளுக்குச் செல்லும் மக்கள் முக்கிய நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்ள உள்நாட்டு விமானங்களை நாடுவதாகவும் இதனால் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாடகர்கள் மீது பொழிந்த பண மழை

சூரத்: குஜராத்தின் சூரத் நகரில் கோவில் திருவிழாவில் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த பாடகர்கள் மீது ரசிகர்கள் பண மழை பொழிந்துள்ளனர். ஆட்டம் போட வைக்கும் குரலுடன் பாடப்பட்ட இசை நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர். அப்போது உற்சாகம் அடைந்த இசை ஆர்வலர்கள் சிலர், பணத்தை கட்டுகளாகக் கொண்டு வந்து பாடகர்கள் மீது வீசி பறக்க விட்டனர். இப்படி கொட்டிய பண மழையிலும் இசை மழை நிற்காமல் ஒலித்தது.

184 பிரமுகர்களின் பாதுகாப்பு ரத்து

சண்டிகர்: பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சி அமைத்ததை அடுத்து, முதல்வராக பகவந்த் மான் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், இம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சன்னி, முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்கள், பாஜக மாநில துணைத் தலைவர், மாவட்ட பாஜக தலைவர் உள்ளிட்ட 184 முக்கிய பிரமுககர்களுக்கு வழங்கப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பு ரத்து செய்யப் பட்டுள்ளதாக கூடுதல் டிஜிபி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ரூ.3,800 கோடி கடன்

கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு கூடுதலாக ரூ.3,800 கோடி கடன் வழங்க இந்தியா சம்மதித்துள்ளதாக இலங்கை நிதியமைச்சர் அலி ஜாப்ரி கூறியுள்ளார்.

இதற்கிடையே, பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இடைக்கால அரசு அமைக்கவேண்டும் என்று போராட்டக் காரர்கள் விடுத்துள்ள வேண்டுகோளைப் பிரதமர் மகிந்த ராஜபக்சே நிராகரித்துள்ளார். இலங்கையில் இடைக்கால அரசு அமைந்தாலும் நானே பிரதமராக இருப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால், இது ராஜபக்சேக்களின் நாடல்ல என்று முழங்கி களம் இறங்கியுள்ள பொதுமக்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ளதால் இலங்கை அதிகார மையத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல்.