மும்பை: மும்பையில் நகை வியாபாரி ஒருவரின் கடையில் பொருள் சேவை வரித் துறை, வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், பூமியில் பெரும் பள்ளம் தோண்டி கட்டுக் கட்டாகப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதேபோல், கிலோ கணக்கில் சுவரில் பதித்து வைக்கப்பட்டிருந்த வெள்ளிக் கட்டிகளும் மீட்கப்பட்டன.
இரவில் தொடங்கிய பணம் எண்ணும் பணி அதிகாலையில் தான் முடிவடைந்தது எனவும் மொத்தம் ரூ.9 கோடியே 78 லட்சம் பணமும் 19 கிலோ வெள்ளிக் கட்டிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறின.
மகாராஷ்டிர மாநிலம், மும்பைநகரில் தங்க விற்பனை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த சாமுண்டா நிறுவனம் பொருள் சேவை வரியைக் கட்டாமல் மோசடியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டில் ரூ.22 கோடியாக இருந்த இந்நிறுவனத்தின் வருவாய் மூன்றே ஆண்டுகளில் 1,764 கோடி ரூபாயாக பல மடங்கு உயர்ந்தது.
விசாரணையில், வருமான வரித்துறையினருக்கு கணக்கு காட்டாமல் பல நிறுவனங்களை நடத்திவந்தது வெளிச்சத்துக்கு வந்தது.
இதற்கிடையே, பணம் கைப்பற்றப்பட்ட இடத்தின் உரிமையாளரும் குடும்ப உறுப்பினர்களும் பணம், வெள்ளிக் கட்டிகள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறியதை அடுத்து, குறிப்பிட்ட இடத்தை மூடி முத்திரை வைத்தனர்.