செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
6c9da881-fcea-47e1-9f12-8762fee19daf
-

ஏழு இந்திய மாலுமிகள் விடுவிப்பு

புதுடெல்லி: ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சிறை பிடிக்கப்பட்ட கப்பலில் இருந்த ஏழு இந்திய மாலுமிகள் உட்பட 14 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஓமன் நாட்டு வெளியுறவு அமைச்சர் அல்புசைதி உறுதிப்படுத்தி உள்ளார். மீட்கப்பட்ட 14 பேரும் மஸ்கட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்நிலை யில், இந்த மீட்பு நடவடிக்கைக்காக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

பாலக்காட்டில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

திருவனந்தபுரம்: அண்மையில் நிகழ்ந்த இரட்டைக் கொலைச் சம்பவங்களை அடுத்து ஏற்பட்ட பதற்ற நிலை கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் இன்னும் தணியவில்லை. இதையடுத்து அங்கு வரும் 28ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் அண்மையில் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த சுபைர் என்பவர் கொலை செய்யப்பட்டார். அதற்கு மறுதினமே ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கொல்லப்பட்டார். இதனால் அம்மாவட்டத்தில் பெரும் பதற்றம் நிலவியது. படுகொலைகள் தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் பதற்றம் நீடித்து வருகிறது.

ஐந்து நாள்களுக்குப் பிறகு தொற்றுப் பாதிப்பு சற்றே குறைந்தது

புதுடெல்லி: ஐந்து நாள்களுக்குப் பிறகு நாட்டில் கொரோனா அன்றாட தொற்றுப்பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நேற்று முன்தினம் புதிதாக 2,541 பேருக்கு கிருமி தொற்றியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு கூறியது. ஆக அதிகமாக டெல்லியில் 1,083 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹரியானாவில் 417 பேர், கேரளாவில் 281 பேர், உத்தரப் பிரதேசத்தில் 212 பேர், மகாராஷ்டிராவில் 144 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது. கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, மேற்குவங்காளம், ராஜஸ்தான் பஞ்சாப் உள்பட நாடு முழுவதும் 12 மாநிலங்களில் ஒருவார பாதிப்பு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா நான்காம் அலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

புவிசார் அரசியல், பொருளாதார மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது

புதுடெல்லி: 90 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் புவிசார் அரசியல், பொருளாதார மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்தியாவின் முதன்மையான மாநாடாகக் கருதப்படும் இந்த அனைத்துலக மாநாட்டில், சுமார் 210 பிரதிநிதிகள் பங்கேற்றனர். மூன்று நாள்கள் நடைபெறும் இந்த உரையாடல் மூலம், உலகளாவிய சமூகம் எதிர்கொள்ளும் சவாலான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும் என நிபுணர்கள் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இந்தியா இந்த அனைத்துலக மாநாட்டை நடத்தி வருகிறது. தற்போது மாநாட்டின் 7ஆவது பதிப்பு நடைபெறுகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த மாநாடு காணொளி முறையில் நடைபெற்றது. இம்முறை போலந்து வெளியுறவு அமைச்சர் மாநாட்டில் பங்கேற்றுள்ளார். ஒன்பது ஆண்டுகளில் போலந்து வெளியுறவு அமைச்சர் இந்தியா வருவது இதுவே முதல் முறை.