லக்னோ: லக்கிம்பூர் வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய இணையமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட பிணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, அவர் காவல்துறையிடம் சரண் அடைந்தார். இதையடுத்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்தார் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா. அவரை பாஜகவினர் பலர் தங்களது வாகனங்களில் பின்தொடர்ந்தனர்.
இந்நிலையில், அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது மோதியது. இதில் நான்கு விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் வன்முறை வெடித்தது. அப்போது நடத்தப்பட்ட தாக்குதலின்போது எட்டு பேர் பலியாகினர்.
ஆஷிஷ் மிஸ்ராவின் கார் மோதியதால்தான் விவசாயிகள் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து அவர் கைதானார். பின்னர் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், தமக்குப் பிணை வழங்கக்கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்ய, அதை விசாரித்த நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி பிணை வழங்கி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தார் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான சிறப்பு அமர்வின் முன் நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நீதிபதிகள், கடந்த 18ஆம் தேதி தீர்ப்பளித்தனர்.
ஆஷிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட பிணை ரத்து செய்யப்படுவதாகவும் ஒரு வாரத்துக்குள் அவர் காவல் நிலையத்தில் சரண் அடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி அவர் காவல் நிலையத்தில் சரணடைந்த பின்னர் சிறையில் அடைக்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

