மும்பை: மும்பை காவல்துறை ஒருபோதும் தவறான வழக்குகளைப் பதிவு செய்ததில்லை என சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் (படம்) கூறியுள்ளார்.
மேலும், சில மோசடிப் பேர்வழிகள் மீது பொதுமக்கள் கல்லெறிந்தால் பாஜகவுக்கு ஏன் வலிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
மும்பையில் உள்ள மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவின் தனிப்பட்ட இல்லத்தின் முன் பஜனைப் பாடல்களைப் பாடப்போவதாக அறிவித்த பாஜக எம்எல்ஏ ரவி ராணாவும் அவரது மனைவியும் நாடாளுமன்ற உறுப்பினருமான நவ்நீத் ராணாவும் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக இருவரும் இவ்வாறு அறிவித்திருந்தனர்.
இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை பாய்ந்தது. இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காவல் நிலையத்தில் இருந்த இருவரையும் பாஜக மூத்த தலைவர் கிரித் சோமையா சந்தித்துவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது காரை முற்றுகையிட்ட சிவசேனா தொண்டர்கள் கற்களையும் காலணிகளையும் காரின் மீது வீசி தாக்கியதாகவும் அவர் இதில் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், விசாரணை நடக்கும் இடத்தில் கிரித் சோமையாவுக்கு என்ன வேலை என சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி உள்ளார்.
"மத்திய அரசின் விசாரணை முகமைகள் சிவசேனா தலைவர்களிடம் விசாரணை நடத்துவது குறித்து நாங்கள் பலமுறை கேள்வி எழுப்பியுள்ளோம்.
"அதற்கு, போதுமான காரணங்கள் இருப்பதால்தான் விசாரணை நடக்கிறது என பாஜகவினர் கூறுவர்.
"அதேபோல் மும்பை காவல்துறையையும் நம்ப வேண்டும். அவர்கள் ஒருபோதும் தவறான வழக்கு பதிவு செய்தது இல்லை.
"சில துரோகிகள் மீது கல்வீச்சு நடக்கிறது. ரவி ராணா ஒரு பொய்யர். எனவே அவரைப் பொருட்படுத்த வேண்டாம்," என்று சஞ்சய் ராவத் மேலும் தெரிவித்துள்ளார்.