புதுடெல்லி: கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் சுமார் 1.7 மில்லியன் பேருக்கு 'ஹெச்ஐவி' பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பற்ற உடல் உறவுதான் இதற்கு முக்கிய காரணம் என்றும் தெரியவந்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த ஆர்வலரான சந்திரசேகர் கவுர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாட்டில் எய்ட்ஸ் பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதை அறிய சில தகவல்களைக் கோரி இருந்தார்.
அதற்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் பதில் அளித்துள்ளது. அதன்படி 2011 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், 1,708,777 பேர் பாதுகாப்பற்ற உடல் உறவு காரணமாக 'ஹெச்ஐவி' பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த பத்து ஆண்டுகளில் அதிகபட்சமாக ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 318,814 பேருக்கு 'ஹெச்ஐவி' பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
284,577 பேருடன் பாதிப்புப் பட்டியலில் மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும் 212,982 பேருடன் கர்நாடகா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
தமிழகத்தில் 116,536 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்பட்டியலில் தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது.
மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் 15,782 பேருக்கு ரத்தம் மூலம் 'ஹெச்ஐவி' பரவியுள்ளது என்றும் 4,423 குழந்தைகளுக்கு தாய் மூலம் தொற்று பரவியுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
2020ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி, இந்தியாவில் 2,318,737 பேர் 'ஹெச்ஐவி' பாதிப்புடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 81,430 பேர் குழந்தைகள் ஆவர்.