புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்யும் பஞ்சாப் மாநிலமும் டெல்லியும் 'அறிவுப்பகிர்வு' ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோரிடையே நேற்று அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் கல்வி, உள்கட்டமைப்பு, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளில் டெல்லியும் பஞ்சாப்பும் தங்களுக்குள்ள தகவல் அறிவுகளைப் பகிர்ந்துகொள்ளும்.
பின்னர் இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் சிங் மான் பேசுகையில், பஞ்சாப் மாநிலத்தில் 117 பள்ளிகள் மற்றும் மொஹல்லா மருந்தகங்கள் உருவாக்கப்படும். கல்வி, சுகாதாரம் மற்றும் அதிகாரம் ஆகியவை தனது அரசாங்கத்தின் முன்னுரிமை. இந்தத் துறைகளில் பல்வேறு முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ள டெல்லியில் இருந்து பஞ்சாப் கற்றுக்கொள்ள முடியும். அதேபோல் விவசாயத்தைப் பற்றி பஞ்சாப்பிடம் இருந்து டெல்லியும் கற்றுக்கொள்ள முடியும் என்றார். தொடர்ந்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "நாங்கள் மட்டும் நல்ல பணிகளைச் செய்தோம் என்று சொல்வது தவறு. நாடு முழுவதும் பல சிறந்த தீர்வுகள் இருந்தாலும், கட்சிகள் மற்றும் மாநிலங்களின் இடையே பிளவுகள் இருந்தன. அதிலிருந்து எதுவும் கற்றுக்கொள்ளவில்லை. ஒவ்வொரு மாநிலமும் பிறர் செய்யும் நல்ல பணிகளில் இருந்து கற்றுக்கொண்டால் இந்தியா முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்," என்றார்.

