புதுடெல்லி: பாதுகாப்புத் துறைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் சீனாவும் உள்ளன. இந்தத் தகவலை 'ஸ்டாக்ஹோம்' என்னும் அனைத்துலக அமைதி ஆய்வு மையம் என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.
நாடுகள், ராணுவத்துக்காக செலவிடும் தொகை 2021ஆம் ஆண்டில் 0.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. மொத்தச் செலவு 211,300 கோடி டாலராகும். இந்தியாவுக்கு அடுத்தநிலையில் இங்கிலாந்து, ரஷ்யா ஆகியன முறையே நான்காவது மற்றும் ஐந்தாமிடங்களில் உள்ளன. மொத்தச் செலவில் இந்த ஐந்து நாடுகளின் பங்கு மட்டும் 62 விழுக்காடாக உள்ளது என அந்த அமைப்பு அதன் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.
அமெரிக்க ராணுவத்துக்கான ஒதுக்கீடு 80,100 கோடி டாலராகும். ராணுவத்துக்கான சீனாவின் ஒதுக்கீடு 29,300 கோடி டாலராகும்.
இந்தியா ராணுவத்துக்கு செலவிட்ட தொகை 7,660 கோடி டாலராகும். அமெரிக்கா, சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியா செலவிட்ட தொகை மிகக்குறைவே.
இங்கிலாந்தின் ராணுவ ஒதுக்கீட்டுத் தொகை 6,840 கோடி டாலராகும்.
ரஷ்யாவின் ராணுவ ஒதுக்கீடு 6,590 கோடி டாலராகும் என்று அந்த அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவித்தது.

