ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா - பிரதமர் மோடி அறிவிப்பு
புதுடெல்லி: இந்தியாவில் உயர்மட்ட வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தை நிறுவ, ஐரோப்பிய ஆணையமும் இந்தியாவும் இணங்கியுள்ளன.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், இரண்டு நாள் அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டு இந்தியா வந்துள்ளார். அவர், நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
ஆணையத்தின் தலைவராக உர்சுலா பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு வருகை மேற்கொள்வது இதுவே முதல்முறை.
இந்தச் சந்திப்பில், ரஷ்யா - உக்ரேன் போரால் ஏற்படும் அரசியல், பொருளாதார மாற்றங்கள் பற்றியும் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தச் சந்திப்பில் இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஆணையத்திற்கும் இடையேயான நீடித்த ஒத்துழைப்பு மற்றும் தடையற்ற வர்த்தகம் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாகப் பேசினர்.
பெரிய மற்றும் வலிமையான ஜனநாயக அமைப்புகளைக் கொண்ட இந்தியாவும் ஐரோப்பாவும் ஒரே மாதிரியான நற்பண்புகள் மற்றும் பல்வேறு உலக விவகாரங்களில் பொதுவான கருத்தைக் கொண்டிருப்பதாக இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஆணையத்திற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம், வர்த்தகம், பருவநிலை, மின்னியல் தொழில்நுட்பம் ஆகியவை குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட்டது. பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஆணையத்திற்கும் இடையே ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறு உள்பட, பருவநிலை மாற்றம் சார்ந்த அம்சங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டது.
அதனையடுத்து இந்தியாவில் ஐரோப்பிய ஒன்றியம் - இந்திய வர்த்தக, தொழில்நுட்ப மன்றம் நிறுவ இந்தப் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாறி வரும் புவிசார் அரசியல் மற்றும் நம்பகமான தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள சவால்களை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஐரோப்பிய ஆணையம் சார்பில் அமெரிக்காவில் 'வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப மன்றம்' அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இப்போது இந்தியாவில் இது நிறுவப்படவுள்ளது.
முன்னதாக உர்சுலா வான் டெர் லெயன், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார். அப்போது, உக்ரேன் போரால் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளியல் பாதிப்புகள் பற்றியும் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது பற்றியும் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

