புதுடெல்லி: இந்தியாவில் கொவிட்-19 அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை என்பதால் அத்தொற்றுக்கு எதிரான அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,927 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் மேலும் 32 பேர் இறந்துபோயினர்.
நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதை அடுத்து, மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.
"ஓமிக்ரான் திரிபும் அதன் துணைத் திரிபுகளும் ஐரோப்பாவில் எத்தகைய மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை நாம் கண்டுள்ளோம். கடந்த சில மாதங்களில், ஓமிக்ரான் துணைத் திரிபுகள் காரணமாகப் பல நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிட, இந்தியாவில் நிலைமை கட்டுக்குள் உள்ளது," என்று பிரதமர் மோடி கூறினார்.
சில மாதங்களுக்குமுன் இந்தியாவில் வீசிய கொவிட்-19 அலை பல பாடங்களைக் கற்றுத்தந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
"நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பையும் உயிர்வாயு விநியோகக் கொள்ளளவையும் வலுப்படுத்தியுள்ளோம். மூன்றாவது அலையின்போது எந்த மாநிலமும் நிலைமை கைமீறிப் போய்விட்டதாகக் கூறவில்லை. நமது தடுப்பூசித் திட்டமும் இதற்குக் கைகொடுத்தது," என்றார் திரு மோடி.
பெரியவர்களில் 96 விழுக்காட்டினர் முதல் தவணை தடுப்பூசியையும் 15 வயதுக்கு மேற்பட்டோரில் 83 விழுக்காட்டினர் இரண்டாவது தடுப்பூசியையும் போட்டுவிட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், பிள்ளைகள் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவது பெற்றோர்களுக்குக் கவலை அளிப்பதாக அவர் சொன்னார்.
"ஆயினும், அதிக அளவிலான குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் 12-14 வயதிற்குட்பட்ட சிறாருக்குத் தடுப்பூசி போடத் தொடங்கினோம். இப்போது 6-12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கொவேக்சின் தடுப்பூசி போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது," என்று திரு மோடி தெரிவித்தார்.
தகுதியுள்ள அனைவரும் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன், சுகாதார உள்கட்டமைப்புகளை விரைந்து மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவிகள், உயிர்வாயு ஆலைகள் ஆகியவற்றைப் பொறுத்தமட்டில் இப்போது நாம் மேம்பட்ட நிலையில் இருக்கிறோம். இப்போது, அவை செயல்பாட்டில் இருப்பதையும் ஏதேனும் இடைவெளி இருந்தால் அதனை நிரப்புவதையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும்," என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, கேரள மாநிலத்தில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விதிமீறுவோர்மீது அபராதம் உட்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

