பெங்களூரு: தரையிறங்கியபோது தாய் ஏர்வேஸ் விமானத்தின் டயர் வெடித்த சம்பவம் பெங்களூரு கெம்பகௌடா அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்தது. அதிர்ஷ்ட வசமாக அதிலிருந்த பயணிகள் அனைவரும் உயிர்தப்பினர்.
"விமானத்தின் பின்புற டயர்களில் ஒன்று வெடித்தது குறித்து விமானி அறிந்திருக்கவில்லை என்பதுதான் அதிர்ச்சியான தகவல். விமான நிலைய ஊழியர்களே முதலில் அதனைக் கண்டுபிடித்து, தகவல் தந்தனர். நல்ல வேளையாக, விமானம் தரையிறங்கியபோது எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை," என்று விமான நிலைய உயரதிகாரி ஒருவர் விளக்கினார்.
உடனடியாக அவ்விமானம் பாதுகாப்பான இடத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு, தொழில்நுட்பப் பணியாளர்கள் அதனைச் சோதித்தனர்.
இதனால், அங்கிருந்து அந்த விமானம் மீண்டும் பேங்காக் புறப்பட்டுச் செல்வது தாமதமானதால் பயணிகள் சில மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது.

