கொச்சி: மலையாளத் திரையுலகில் இன்னொரு நடிகரும் பாலியல் புகாரில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஓடும் காரில் முன்னணி நடிகை ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் முன்னணி நடிகரான திலீப் சிக்கினார்.
இந்நிலையில், 'ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸ்' எனும் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகருமான விஜய் பாபு (படம்), தம்மைப் பாலியல் ரீதியாகச் சீரழித்து, துன்புறுத்தியாக நடிகை ஒருவர் இம்மாதம் 22ஆம் தேதி காவல்துறையில் புகாரளித்தார்.
இதனையடுத்து, விஜய் பாபுமீது இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஃபேஸ்புக்கில் நேரலையாகத் தோன்றிய விஜய் பாபு, அந்த நடிகையின் பெயரை வெளியிட்டதோடு, அவர்மீது தாமும் புகாரளிக்க இருப்பதாகவும் அவமதிப்பு வழக்கு தொடுக்கவுள்ளதாகவும் கூறினார்.
விஜய் பாபு தயாரித்த ஒரு படத்தில் அந்த நடிகை நடித்துள்ளார்.
இதனையடுத்து, அந்நடிகையும் ஃபேஸ்புக் வழியாக தமது விளக்கத்தை அளித்துள்ளார். அதில், விஜய் பாபு தம்மைப் பல ஆண்டுகளாகப் பாலியல் ரீதியாகச் சீரழித்து வந்ததாகவும் உறவுக்கு மறுத்தபோது தம்மைத் தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 13ஆம் தேதி முதல் இம்மாதம் 14ஆம் தேதிவரை பாலியல் ரீதியாகவும் வேறு வழிகளிலும் விஜய் பாபு தம்மைத் துன்புறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரையுலகில் விஜய் பாபுக்கு இருக்கும் செல்வாக்கால் இதுநாள்வரை பொதுவெளியில் பேச அஞ்சியதாகவும் தம்மை ஆடையின்றிக் காணொளி எடுத்து அவர் மிரட்டி வருவதாகவும் அந்நடிகை கூறினார்.
இதனிடையே, விஜய் பாபு தலை மறைவாகிவிட்டதாகக் காவல்துறை கூறியது. ஆனால், அதனை மறுத்த விஜய் பாபு, தான் தற்போது துபாயில் இருப்பதாகத் தெரிவித்து உள்ளார்.