செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
b099f6f2-9f15-4dcf-8045-712ae145929d
-

புதிதாய்ப் பிறந்த பேத்தியை ஹெலிகாப்டரில் அழைத்து வந்தார்

புனே: தமக்குப் பேத்தி பிறந்ததால் பெரிதும் மகிழ்ச்சியுற்ற விவசாயி ஒருவர், அவரை வீட்டிற்கு அழைத்துவர ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலம், புனேவில் நிகழ்ந்தது. அஜித் பாண்டுரங் பல்வத்கர் எனும் அவர், தமது குடும்பத்தின் புதிய வரவான பேத்தி கிருஷிகாவிற்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க விரும்பியதால், அவ்வாறு செய்ததாகத் தெரிவித்தார்.

6,000 ஒலிபெருக்கிகள் அகற்றம்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் கடந்த மூன்று நாள்களில் மட்டும் பல்வேறு சமயத் தலங்களில் இருந்து 6,031 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டன. மேலும் 30,000 ஒலிபெருக்கிகளில் சத்தத்தின் அளவு குறைக்கப்பட்டது. அண்மையில், எந்தவொரு சமய வழிபாட்டுத் தலத்திலும் ஒலிபெருக்கிகளின் ஓசை அனுமதிக்கப்பட்ட ஒலி அளவைத் தாண்டக்கூடாது என்றும் தேவைக்கு அதிகமான ஒலிபெருக்கிகள் அகற்றப்பட வேண்டும் என்றும் அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.

பயங்கரவாதம் 122% அதிகரிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இவ்வாண்டில் பயங்கர வாத வன்முறைச் சம்பவங்கள் 122% அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வத் தரவுகள் தெரிவிக்கின்றன. இம்மாதம் 15ஆம் தேதிவரை, அங்கு 17 கையெறிகுண்டுவீச்சு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதே காலகட்டத்தில் பாதுகாப்புப் படைகள் மற்றும் அப்பாவிகள் மீதான தாக்குதல்கள் 189 விழுக்காடும் 'என்கவுன்டர்' சம்பவங்கள் 127 விழுக்காடும் கூடியுள்ளன. இம்மாதத்தில் அங்கு பயங்கரவாதிகள் ஆட்கடத்தலில் ஈடுபட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

மகனின் உடலைத் தோளில் சுமந்தபடி 90 கிலோமீட்டர் பயணம்

திருப்பதி: அரசாங்க மருத்துவமனையின் அவசர மருத்துவ வாகன ஓட்டுநர்கள் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டதால், பத்து வயது மகனின் உடலைத் தோளில் சுமந்தபடி தந்தை ஒருவர் 90 கிலோமீட்டர் ஸ்கூட்டரில் பயணம் செய்து, வீட்டிற்குக் கொண்டுவந்த சம்பவம் ஆந்திராவின் திருப்பதி நகரில் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த காணொளி சமூக ஊடகங்கள் வழியாகப் பரவலானதால் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த திருப்பதி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 'ஆம்புலன்ஸ் மாஃபியா'வைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெலுங்கு தேசம், பாஜக கட்சியினர் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரூ.11 கோடி போதைப்பொருள் பறிமுதல்

ஹைதராபாத்: தென்னாப்பிரிக்காவிலிருந்து துபாய் வழியாக இந்தியாவிற்குப் போதைப்பொருள் கடத்திவந்த தான்சானிய நாட்டவர் ஹைதராபாத் ராஜீவ் காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார். இம்மாதம் 21ஆம் தேதி எமிரேட்ஸ் விமானம் வழியாக அவர் போதைப்பொருள் கடத்தி வருவதாக உளவுத்தகவல் கிட்டியது. விசாரணையில் 'கொக்கைன்' அடங்கிய குப்பிகளை தாம் விழுங்கியதை அவர் ஒப்புக்கொண்டார். விமான நிலையத்திலேயே அவர்

22 குப்பிகளை வெளியேற்றினார். பின்னர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அடுத்த ஐந்து நாள்களில் மேலும் 57 போதைமருந்துக் குப்பிகளை வெளியேற்றினார். மொத்தம் 1,157 கிராம் கொக்கைன் மீட்கப்பட்டது என்றும் அதன் மதிப்பு ரூ.11.57 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டது.