கோல்கத்தா: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் பிரதமர் மோடி மாற்றான்தாய் மனப்பான்மையுடன் பாரபட்சமாக நடத்தி வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
இதேபோல், தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு ஆகிய ஏழு மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்காமல் உள்ளதால்தான் மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக மோடி கூறியிருந்தார்.
பிரதமர் குறிப்பிட்ட ஏழு மாநிலங்களிலும் பாஜக அல்லாத கட்சி களின் ஆட்சி நடந்து வருகிறது.
கடந்த புதனன்று அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மோடி ஆலோசித்தார்.
அப்போது, அவர் கூறிய கருத்தை ஏற்க மறுத்துள்ள முதல்வர்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமாக உள்ள மத்திய அரசே, விலை உயர்வைக் குறைக்கவும் முன்வரவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
மம்தா பானர்ஜி பேசியபோது, "பிரதமர் மோடி நடத்திய ஆலோசனைக் கூட்டம் ஒரு சாராருக்கு மட்டுமே ஆதரவாக இருந்தது. அவரது கருத்துடன் எனது கருத்து ஒத்துப்போகாது. எதிர்க்கட்சியினர் ஆளும் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மோடி நடத்துகிறார்," என்றார்.
அதேபோல், சந்திரசேகர ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காணொளி வாயிலாக மோடி நாடகம் நடத்தினார். அவரது பேச்சை முதல்வர்கள் 4 மணி நேரம் கேட்கவேண்டும். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி பேசப் போவதாக கூறிவிட்டு, அவர் பேசியது வேறு விவகாரம்,'' என்றார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பான பிரதமரின் குற்றச்சாட்டு, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று விமர்சித்தார்.
எரிபொருள்கள் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைக்கவேண்டும் என வலியுறுத்தி உள்ள தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், எட்டு ஆண்டுகளில் பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு 200% உயர்த்திவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிைடயே, "மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைப்பதே வாட் வரியால்தான். அதை குறைக்கச் சொல்வதில் என்ன நியாயம் உள்ளது," என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

