அனல்காற்று தொடர்பில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை

அனல்காற்று தொடர்பில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை

2 mins read
44a3649b-655b-4ba4-9fb1-340734442ddd
சுட்டெரிக்கும் வெயிலால் புதுடெல்லி சாலைகளில் காணப்படும் கானல் நீரின் தோற்றம். படம்: இபிஏ -

புதுடெல்லி: இந்­தி­யா­வின் பெரும்­பா­லான பகு­தி­களில் அடுத்த ஐந்து நாள்­க­ளுக்குக் கடு­மை­யான அனல் காற்று வீசும் என்று இந்­திய வானிலை ஆய்வு மையம் எச்­ச­ரித்­துள்­ளது.

இதைத்­தொ­டர்ந்து குறிப்­பிட்ட பகு­தி­க­ளுக்கு ஆரஞ்சு எச்­ச­ரிக்கையும் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

ஆரஞ்சு எச்­ச­ரிக்கை என்­பது, வெயி­லின் கடுமையான தாக்­கத்­துக்கு தயா­ராக இருக்க வேண்­டும் என்­பதைக் குறிக்­கும்.

கோடைக்­கா­லம் என்­ப­தால் இந்­தி­யா­வின் பெரும்­பா­லான இடங்­களில் வெப்­ப­நிலை அதி­க­ரித்துவருகிறது. இந்நிலையில், நாட்­டின் வட­மேற்கு, மத்­திய வட்­டா­ரங்­களில் அடுத்த ஐந்து நாள்­க­ளுக்கு கடு­மை­யான அனல் காற்று வீசும் என முன்­னு­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

இதன் கார­ண­மாக வெப்­ப­நிலை இரண்டு டிகிரி செல்­சி­யஸ் வரை அதி­க­ரிக்­கக்கூடும் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது.

ராஜஸ்­தான், மத்­தி­ய ­பி­ர­தே­சம், மகா­ராஷ்­டி­ரா­வின் விதர்பா உள்ளிட்ட பகு­தி­களில் அடுத்த நான்கு நாள்க­ளுக்கு ஆரஞ்சு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

மத்­திய பிர­தே­சத்­தின் ராஜ்­கர்க் பகு­தி­யில் 45.6 டிகிரி செல்­சி­யல் வெப்­பம் பதி­வான நிலை­யில், வட­மேற்கு இந்­தி­யா­வின் பல இடங்­களில் 47 டிகிரி செல்­சி­ய­ஸுக்கு மேல் வெப்­பம் பதி­வா­கக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இந்­திய வானிலை ஆய்வு மையம் வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்­பில், "ராஜஸ்­தான், உத்­த­ரப்­பி­ர­தே­சம், டெல்லி, ஹரி­யானா, ஒடிசா ஆகிய ஐந்து மாநி­லங்­களில் அடுத்த ஐந்து நாள்­க­ளுக்கு வெயில் அதி­க­மாக இருக்­கும். தற்­போதே இந்த மாநி­லங்­களில் வெப்பநிலை 45 டிகிரி செல்­சி­யஸ் அளவைத் தாண்டி பதிவாகியுள்ளது.

"அடுத்த மூன்று நாள்­க­ளுக்கு வட­மேற்கு மாநி­லங்­களில் வெப்பநிலை இரண்டு டிகிரி செல்­சி­யஸ் அதிகரிக்கக்கூடும். நாட்­டின் பெரும்­பா­லான பகு­தி­களில் அனல் காற்று வீசும்.

"இந்த நிலை மே முதல் வாரம் வரை நீடிக்­கும். அதன்­பி­றகு மழை அதி­க­ரிக்­கும்­போது வெப்ப நிலை குறை­யும்," என்று குறிப்பிடப்பட்­டுள்­ளது.

தலை­ந­கர் புதுடெல்­லி­யிலும் வெயில் வாட்டி வதைத்து வரு­கிறது. நேற்று முன்தினம் அங்கு 43.5 டிகிரி செல்­சி­யஸ் வெப்­ப­நிலை பதி­வானது.

இது கடந்த 12 ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னர் ஏப்­ரல் மாதத்­தில் பதி­வான அதி­க­பட்ச வெப்­ப­ம் என்று கூறப்பட்டது.