செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
3f6c9d6f-8d0a-4936-a052-958d5a4f9dae
-

'தேசிய மொழி குறித்து பொதுமக்கள் கருத்தைக் கேட்கவேண்டும்'

கோல்கத்தா: இந்தி தேசிய மொழியா என்பது குறித்துப் பொதுமக்களின் கருத்தைக் கேட்கவேண்டும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டில் அலுவல் மொழியாக ஆங்கிலத்திற்கு பதில் இந்தி மொழிதான் இருக்க வேண்டும் என்று கூறினார்.

இது தமிழகம் உள்ளிட்ட இந்தி மொழி பேசாத மாநிலங்களில் கடும் விமர்சனங்களைக் கிளப்பியது.

இந்நிலையில் செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த திருவாட்டி மம்தா, இந்தி மொழி குறித்து கூட்டாக முடிவெடுப்பதற்காக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதலமைச்சர்களுடன் விவாதிக்க உள்ளதாகக் கூறினார்.

இந்தி பேசாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்: பாஜக அமைச்சர்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சி அமைச்சர் சஞ்சய் நிஷாத், "இந்தியாவில் வசிப்பவர்கள் இந்தியை நேசிக்க வேண்டும். இல்லையெனில், நீங்கள் வெளிநாட்டவராகக் கருதப்படுவீர்கள்," என்று கூறியுள்ளார்.

இந்தி பேச முடியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறி வேறு எங்காவது செல்லுங்கள் என்றும் அவர் கூறியதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

100 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

புதுடெல்லி: ஜாமியா நகர் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 50 கிலோகிராம் எடையுள்ள ஹெராயின் போதைப் பொருளையும் 40 லட்ச ரூபாய் பணத்தையும் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மதிப்பு 100 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு அதனை அனுப்பும் முயற்சியை முறியடித்ததாக அதிகாரிகள் கூறினர். இதன் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை தொடர்கிறது.

துணைவேந்தரின் கொடும்பாவியை எரித்த பல்கலைக்கழக மாணவர்கள்

வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி நகரில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்கலையில் புதன்கிழமை இஃப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முஸ்லிம் மாணவர்கள் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுதிர் கே. ஜெயின் கலந்துகொண்டார்.

இதுகுறித்துத் தகவலறிந்த மற்றொரு தரப்பு மாணவர்கள், பல்கலைக்கழக வளாகத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். துணைவேந்தர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தியதுடன் அவரது கொடும்பாவியையும் மாணவர்கள் எரித்ததாகக் கூறப்பட்டது.

திருமண நிகழ்ச்சியில் சுட்டுக் கொல்லப்பட்ட மணமகள்

மதுரா: உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா வட்டாரத்தைச் சேர்ந்த முபாரிக்பூர் கிராமத்தில் திருமண நிகழ்ச்சியின்போது மணப்பெண் சுட்டுக் கொல்லப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மணமகள் காஜல் 'ஜெய்மாலா' என்ற பாரம்பரியச் சடங்கு முடிந்தவுடன் அறைக்கு ஓய்வு எடுக்கச் சென்றதாகவும் அப்போது முன்னாள் காதலன் அவரைச் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. வேறொருவரை திருமணம் செய்யத் துணிந்ததால் கோபமுற்ற காதலர் காஜலைச் சுட்டதாகக் கூறப்பட்டது.