குவாஹாட்டி: வடகிழக்கு மாநிலங்களில் சட்டம், ஒழுங்கு நிலைமை சீரானதும் அங்கு தற்போது நடப்பில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் விலக்கிக் கொள்ளப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அஸ்ஸாமில் நடைபெற்ற 'அமைதி, ஒற்றுமை, வளர்ச்சி மாநாட்டில்' அவர் கலந்துகொண்டு பேசினார்.
நாகாலாந்து, அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிட்டு ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. எதிர்க் கட்சிகள் அம்மாநிலங்களில் ஆட்சியில் இருந்தவேளையில் அது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.
கடந்த எட்டு ஆண்டுகளாக சட்டம், ஒழுங்கு நிலைமை மேம்பட்டதால் மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் அந்தச் சட்டம் விலக்கிக்கொள்ளப் பட்டது. மற்ற மாநிலங்களில் சில பகுதிகளில் மட்டும் சென்ற 1ஆம் தேதியில் இருந்து அது விலக்கப்பட்டது.
தற்போது சட்டம் அமலில் இருக்கும் பகுதிகளில் சட்டம், ஒழுங்கு நிலைமை மேம்பட்டதன் பிறகு ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டம் முழுமையாக விலக்கிக்கொள்ளப்படும் என்று திரு மோடி தமது உரையில் குறிப்பிட்டார்.
வடகிழக்கு மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறிய அவர், அந்த வட்டாரத்தின் பொருளியலை வலுப்படுத்தும் முயற்சியில் மாநில அரசுகள் முனைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
வடகிழக்கு மாநிலங்களில் புற்றுநோய் சிகிச்சை நிலையங்கள் இல்லை என்பதையும் மக்கள் வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டியிருப்பதையும் சுட்டிய அவர், திப்ரூகர் எனும் இடத்தில் புதிய சிகிச்சை நிலையத்தைத் திறந்து வைத்தார்.
மேலும் ஆறு இடங்களில் உள்ள நிலையங்களை காணொளி வாயிலாகத் திறந்து வைத்ததுடன் புதிதாக ஏழு புற்றுநோய் சிகிச்சை நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டினார். டாடா அறக்கட்டளையுடன் இணைந்து இந்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

