புதுடெல்லி: நாடெங்கும் தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெறும் நிலையில், பல இடங்களில் குழந்தைகள் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாவது பெற்றோருக்கு கவலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாநில முதல்வர்களுடன் காணொளி வழியாக நடத்திய கலந்துரையாடலில், கூடிய விரைவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்குத் தமது அரசு முன்னுரிமை தருவதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஐந்து முதல் பன்னிரண்டு வயது வரையிலானசிறுவர்களுக்காக 'பயாலஜிக்கல்- இ' நிறுவனத்தின் 'கோர்பேவாக்ஸ்' தடுப்பூசிக்கும், 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின் 'கோவேக்சின்' தடுப்பூசிக்கும் இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அவசரப் பயன்பாட்டு அனுமதியை இம்மாதம் 26ஆம் தேதி வழங்கியது.
இவ்வேளையில், புதுடெல்லியில் நேற்று தடுப்பூசி த் திட்டத்துக்கான தேசிய தொழில் நுட்ப ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஐந்து முதல் பன்னிரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை எப்போது தொடங்கலாம் என்று முடிவெடுத்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று கூறப்பட்டது.அதன் அடிப்படையில் மத்திய அரசு அதன் அறிவிப்பை வெளியிடும்.
இதற்கிடையே கடந்த சில நாள்களாக நாட்டில் கிருமிப் பரவல் அதிகரித்துவருவதாகக் கூறப்பட்டுள்ளது.
நேற்று புதிதாக 3,377 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் 1,490 பேர் தலைநகர் புதுடெல்லியைச் சேர்ந்தவர்கள்.

