25 உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கான 39வது மாநாடு
புதுடெல்லி: ஆறு ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள், முதல்வர்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளில் வழக்குகள் நடத்த ஊக்குவிக்கவேண்டும் என்று பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
25 உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளுக்கான 39வது மாநாடு டெல்லியில் நேற்று நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மாநாடு கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நேற்று நடைபெற்றது.
மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, "மொழி என்பது நீதியை பெறுவதற்கு ஒரு வகையான தடையாக இருக்கிறது.
"நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்கவேண்டும். இது நாட்டின் சாதாரண மக்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கையை அதிகரிக்கும்.
"தீர்ப்புகள் என்பது சாதாரண மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய மொழிகளில் இருக்க வேண்டும். புரிந்துகொள்ள முடியாவிட்டால் அது வெறும் உத்தரவாக மட்டுமே பார்க்கப்படும். அது நீதியாக இருக்காது.
"நீதியை எளிதாக வழங்கு
வதற்கு காலாவதியான சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
"2015ஆம் ஆண்டில் பொருத்தமற்றதாக மாறிய சுமார் 1,800
சட்டங்களை நாங்கள் கண்டறிந்தோம்.
"இதில் மத்திய அரசின் 1,450 சட்டங்கள் நீக்கப்பட்டன. ஆனால் 75 சட்டங்கள் மட்டுமே மாநிலங்
களினால் ரத்து செய்யப்பட்டன.
"டிஜிட்டல் இந்தியா பணியின் இன்றியமையாத பகுதியாக நீதித்துறையில் தொழில்நுட்பத்தை
இந்திய அரசு கருதுகிறது.
"இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவை கொண்டாடும் வேளையில் நீதி எளிதிலும் விரைவாகவும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் நீதித்துறை அமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
"நீதித்துறையை மேம்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்.
"நீதித்துறை உள் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்," என்றார்.
யோகி ஆதித்யநாத், மம்தா பானர்ஜி, பசவராஜ் பொம்மை, பூபேஷ் பாகல், பிப்லப் தேவ், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரியும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

