பெங்களூரு: சீனாவின் பிரபல செல்போன் நிறுவனமான சியோமி இந்தியா நிறுவனத்தின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டது. அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சியோமி மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை தரப்பு கூறுகையில், "சியோமி நிறுவனம், ஏற்கெனவே, மிகப்பெரிய தொகையை சீனாவில் உள்ள தங்களது குழும நிறுவனங்களுக்கு அனுப்பிவிட்டது. மீதித்தொகை சில வங்கிக் கணக்குகளில் இருந்தன.
இந்த நிறுவனம் 2014ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தின்படி கைத்தொலைபேசி தயாரிப்பாளர்கள், சீனாவை தலைமையகமாகக் கொண்டிருக்கும் சியோமியின் குழும நிறுவனங்களிலிருந்து கைத்தொலைபேசியைத் தயாரிக்கத் தேவையான பொருள்களை நேரடியாக கொள்முதல் செய்து, சியோமி அளிக்கும் குறிப்பு
களின்படி அவற்றை உற்பத்தி செய்ய வேண்டும்.
ஆனால், சியோமி இந்தியா நிறுவனம் இதுவரை எந்த தொழில்நுட்ப உத்திகளையோ, மென்பொருள் தொடர்புடைய உதவிகளையோ, ஒப்பந்த நிறுவனங்களுக்கு அளிக்கவில்லை.
மாறாக, சியோமி இந்தியா நிறுவனம் பணத்தை வெளிநாட்டைச் சேர்ந்த மூன்று நிறுவனங்களுக்கு அனுப்பி உள்ளது.
ஆனால், பணம்பெறும் அந்த நிறுவனங்கள் எந்த வணிகச் சேவைகளையும் மேற்கொள்ளவில்லை. இது அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் நான்காவது பிரிவின் கீழ் விதிமீறலாகும்.
அதுபோல, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பணத்தை பரிமாற்றம் செய்யும்போது, இந்த நிறுவனம் வங்கிகளுக்கு தவறான தகவல்களை அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது," என்று குறிப்பிட்டுள்ளது. இந்தச் செய்தி தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

