திருவனந்தபுரம்: கேரளாவில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின்போது கடந்த ஐந்து நாள்களில் மட்டும் 110 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் கெட்டுப்போன நிலையில் இருந்த கிலோ கணக்கிலான இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் கடந்த வாரம் கோழி 'ஷவர்மா' சாப்பிட்ட மாணவி ஒருவர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பரோட்டாவுடன் பாம்பு தோல் இருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் அதிரடி சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அத்துறையின் அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
உணவகங்களில் விற்கப்படும் உணவு வகைகள் தரமாக உள்ளனவா, உணவகங்களில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றனவா என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
தரமற்ற உணவுப் பொருள்கள் இருப்பதும் சுகாதாரச் சீர்கேடு நிலவுவதும் தெரியவரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உணவகங்கள் உடனடியாக மூடப்படுகின்றன.
கடந்த ஐந்து நாள்களில் மட்டும் 110 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் 347 உணவகங்கள், நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

